புதன், 23 அக்டோபர், 2013

கவிஞனுக்கு சமர்ப்பணம்

இரவென்றும் பகலென்றும்
பாராமல் உனக்காக
நான் காத்திருந்த
பொழுதுகள் எல்லாம்
வீணாகப் போனதாய்

யாரேனும் கூறினால்
அவர்களுக்கு நான்
பதில் சொல்வதில்லை,
கவிதை புத்தகத்தையே
வாசிக்க தருகிறேன்.
வாசித்து முடிக்கையிலும்
நேசித்த இதயத்தை
சுவாசித்து முடிக்கையிலும்
காதல் காதல் காதல்...
காதல் மட்டுமே
எல்லாம் எல்லாம்
கடந்து நிற்கும்.
இப்போது கேட்கிறேன்
வீணாகப் போனதா
காத்திருந்த பொழுதுகள் ??.
இல்லை இல்லை
காணமல் போனது
எங்கள் இதழ்
உதிர்த்த வார்த்தைகள்.
ஓ காதலனே
காதலாகிப் போனோம்
உன் கவிதைகளால்.
அவளுக்கான காத்திருப்புகள்
அனைத்துமே உன்
கவிதைக்கான விதைதான்.

வியாழன், 3 அக்டோபர், 2013

நினைவலைகள்!

எல்லாம் மறந்துவிட்டது என்று நம்பும் வேளையில்
ஏதோ ஒரு ரூபத்தில் வரும் பதின்மத்தின் நினைவுகள்
மெதுவாய் நம்மை பழமைகளுக்கும் அமிழ்த்த,
விரியும் காட்சிகளில் சில
ஆரிய வடுவில் மழு வைத்து இடற
உணரும் வேதனையில் மனசு கணக்கிறது.
கண்களின் ஈரத்தை இமைகள் துடைக்கிறது.
மனசின் ரணத்தை காலம் கரைக்கிறது.
எல்லாம் கடந்து மீண்டெழும் பொழுதுகளில்
அவை மற்றுமொரு வேளையில்
வேறேதேனும் ரூபத்தில்
நம்மை பழமைகளுக்குள் இழுக்கும்.

திங்கள், 30 செப்டம்பர், 2013

நிழலான நினைவுகள் !!

துணையற்ற பயணம்,
அந்தி மாலை, சன்னல் ஓரம்
மலைச்சாரல் காற்றின் தேவானுபவம்,
அரசுப் பேருந்தின்
ஆரவாரமற்ற வேகத்தில்
மெல்லிய சாரலை உள்வாங்கி
உயிர்படர விட்ட வேளை
இரைச்சலைத் தாண்டி
இளையராஜா தன் மெல்லிசையால்
காதலைக்  கனியவிட
சட்டென சுற்றம் கரைந்து
இமைகள் தானாய் மூடிக்கொள்ள
ஏதோ ஒரு சக்தி என்னை
நிகழ்காலத்தில் இருந்து
பழமைக்குள்  இழுத்துச்செல்ல
ஏதேதோ எண்ணங்கள்
என்னில் நிறைந்து நிறைந்து
என்னை என்னுள்ளே
கரைத்துக் கொண்டிருந்தது.
கடந்த கால நினைவுகளில்
காணமல் போவது ஒரு சுகம்,
வலிகள் நிறைந்த ஒரு நித்திய சுகம்.
கண்களின் ஈரத்தை
இமைகள் உணர்ந்த பொழுதில்
சட்டென வெளிப்பட்டேன்.
கன்னங்கள் நனைத்த கண்ணீர்
மெல்லிய தென்றலில் சில்லிட்ட நேரம்
என்னவளின் இதழ்கள் இயம்பிய
ஈரத்தை மீட்டெடுத்து
மீண்டும் அமிழ்த்தியது பழமைகளுக்குள்.
இசையுடன் தொடர்ந்தது பயணம்,
இம்முறை பயணித்தது தனியாய் அல்ல
நான், என்னவள் மற்றும் இளையராஜா.




புதன், 25 செப்டம்பர், 2013

மின்னல் புன்னகை

 
வனப்பு மிக்க வார்த்தைகளால்
பொருள் பொதிந்த வார்த்தைகளால்
அழகழகான வார்த்தைகளால்
தேடித் தேடி உன்னை பற்றி
அழகான கவிதை ஒன்றை
படைத்துவிட்டோம் என்று
ஆனந்தக் கூத்தாடி
நீ வாசிக்கக் கொடுப்பேன்
வாசித்து முடிக்கையில்
உன்னில் உதிக்கும்
சிறு மின்னல் புன்னகையில்
சகலமும் சரிந்து உன் பாதங்களில் பணிந்துவிடும்.
உலகின் எந்த அழகை அருகே வைத்தாலும்
நீ பூக்கும் புன்னகையே
எல்லாவற்றையும் விட அழகாய்த் தோன்ற
உன்னைவிட அழகான கவிதை
எழுத எங்கிருந்து வார்த்தைகள் தேட.
இருப்பினும் மீண்டும் தேடலை தொடர்கிறேன்
மீண்டும் ஒரு அழகான கவிதைக்காய்
அதனினும் அழகான நின் புன்னகைக்காய்.
 

திங்கள், 23 செப்டம்பர், 2013

இரவின் வெறுமை!


என் உறங்கா இரவுகளின்
கருமைகளை  மையாக்கி
என்னுள் நிறைந்த வெறுமையினை
வார்த்தைகளாய்ச்  சமைத்து
நீ என்னவள் என்று உரிமை பாடும்
கவிதைகளை அனுதினம்
எழுதிக்கொண்டே இருக்கிறேன்.
வாழ்வின் எதாவது ஒருநாளில்
ஒரு கணநேரம் அவை உன் கண்ணில்
படாமலா போய்விடும்,
அப்படி எனது ஒரு கவிதையை
நீ வாசித்து முடிக்கும் நிமிடம்
என் வெறுமைகள் முழுதும் நீ நிறைவாய்
என் இரவுகள் அனைத்திலும் நிலவாய் நீ இருப்பாய்
கடந்து வந்த பாதை முழுவதும் மலர் நிரப்பி
நினைவுகளில் உன் கரம்பிடித்து நான் நடப்பேன்.
அந்தச் சில நாழிகை போதும்
என் காதல் முழுமை பெற.
அதுவரை உறங்கா இரவுகளில்
நிறைந்த வெறுமைகளோடு 
கரைந்துகொண்டிருப்பேன் நான்
உனக்கான காதலைச் சுமந்துகொண்டு.

வியாழன், 12 செப்டம்பர், 2013

என்னவள்





அன்று இறுதியாய் கல்லூரி விடுதியில் இருந்து
உன்னை அழைத்துச் செல்ல காத்திருந்தேன்.
என்றும் நீ என்னை நெருங்கும் முன்
என்னை நெருங்கும் உன் வார்த்தைகள் “கிளம்பலாமா?
இம்முறை அமைதியாய் வந்து
என்னருகில் அமர்ந்திருந்தாய்,
உன் மூச்சின் ஸ்பரிசம் பட்டபோதுதான்
நினைவுகளில் கரைந்திருந்த நான்
நிஜத்திற்க்குள் நழுவினேன்.
அமைதியாய் இருந்து பழக்கமற்ற இருவரும்
ஆரவாரமற்று அமர்ந்திருந்தோம்.
நான் எழுந்து கிழம்ப முயல்கையில்
என் கரம்பற்றி இழுத்து அமர்த்தினாய்,
உன் கண்கள் வழி என்னில் ஊடுருவினாய்,
மனதைத் துளைத்து அதன் ஆழம் நுழைந்து
உள்ளிருப்பதை உணரும் ஆர்வம் கண்டேன் உன்னில்.
ஆயிரம் எண்ணங்கள் மனதில் எழுந்தாலும்
உதடுகள் பூட்டிக்கொண்டதால்
வார்த்தைகள் வாழ்விழந்தது என்னில்.
வெறும் வெறுமை மட்டுமே
நம்மை சூழ்ந்திருப்பதாய் உணர்ந்தேன்.
கரங்களை பற்றியிருந்தவள்
சட்டென கட்டியனைத்தாய்,
நின் கண்கள் சிந்திய கண்ணீரை
என் கன்னங்களில் ஒற்றி எடுத்தாய்,
எதிர்பாரா நிமடத்தில் நெற்றியில்
நின் இதழ் பதித்தாய்,
நிதானித்து நிகழ்வுகளை உணர்வதற்குள்
விட்டு விலகி வாகனத்தை நெருங்கி நின்றாய்,
காரணம் அறியாமல் கண்கள் சிந்திய கண்ணீரில்
மட்டற்ற மகிழ்ச்சியை உள்ளூர உணர்ந்தேன்.
அதுவரை பலமுறை உன்னோடு பயணித்திருந்தும்
நம் காதலுடனான பயணம் தொடங்கியது அன்று.



ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

நிஜம்.




ஒவ்வொரு நாளும்
காலை எழுந்ததும் நீ அறியாமல்
உன் கரங்களை  என் மீதிருந்து நகர்த்தி
அவசர அவசரமாக அந்த நாளுக்காய்
என்னை தயார் செய்துகொண்டு
அலுவலகம் அடைந்து
கணினியின் திரையிலும்
கோப்புகளின் பக்கங்களிலும் புதைந்து
அடுத்திருப்பவருக்கு ஒரு
புன்னைகையை கூட பகிர நேரமில்லாமல்
வேலையில் புதையும் வேளையிலும்
ஏதோவது ஒரு நொடியில்
ஏதோ ஒரு மூலையில்
உன் நினைவுகள் தீண்டாமல் இருந்ததில்லை.
நாளின் ஓட்டம் முடிந்து ஓய்ந்துபோய் வீடு வந்து
உள் நுழைந்து அமரும் வேளையில்
திறந்த உடன் ஓடி வந்து உடல் புகுந்து சில்லிடும்
மழைகால மாலையின் சன்னல் காற்றாய்
நொடிகூட தாமதிக்காமல்
சட்டென என் மீது படர்ந்து கொள்கிறாய்.
இப்படி இருக்க எப்படி நம்புவேன் நான்
நீ என் வாழ்வில் இல்லை என்று.





வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

புரிதல்


கடவுளுக்கும் காதலுக்கும்
அத்தனை பெரிய
வித்யாசம் ஒன்றும் இல்லை.
இரண்டிலும் அதன்
இருப்பை உணர்ந்த பின்
இல்லாமலே போகிறோம் நாம்.

புதன், 21 ஆகஸ்ட், 2013

நீயற்றும் உன்னுடன்




சிதிலமான என் வாழ்க்கையை
காதலெனும் பதத்தால் செப்பனிட்டாய்.
உன் உணர்வுகாளால்
என்னில் உயிர் நிறைத்தாய்.
வெறும் கனவு கூடாதென்று
கனவாய் இருந்த வாழ்வை
உயிர்ப்புடன் வாழவைத்தாய்.
என்னை சுற்றி இயங்கும் உலகின்
ஒவ்வொரு அசைவிலும் நீ நிறைந்தாய்.
எல்லாமுமாய் இருந்து
சட்டென ஒரு நாள் இல்லாமலும் போனாய்.
எங்கு ஏன் சென்றாய் என்ற
விடையறியாக் கேள்விகளுக்குள்
என்னை தள்ளிவிட்டு
காணாமல்தான் போயிருந்தாய் நீ.
இருப்பினும் உயிர்ப்புடன் வாழ்கிறேன் நான்.
நீ எனக்காக விட்டுச்சென்ற
உன் நினைவுகளே எங்கும் நிறைந்திருக்கும்
ஒரு நிசப்தமான உலகத்தில்.
உனக்கான என் காதலுக்கு
நீ வேறாய் நின் நினைவுகள் வேறாய்
பகுக்கத் தெரிந்ததில்லை
அன்றும் இன்றும் என்றும்.

சனி, 17 ஆகஸ்ட், 2013

தூது !!!



என்னவளுக்காய் எண்ணிலடங்கா
கவிதைகள் புனைந்துகாற்றினில் தூதனுப்பினேன்,
உன் நினைவுகளின்  வேதனையில்
என் உணர்வுகளின் ஊடலில்
வார்த்தைகளின் வீரியம் கூடியபோதேல்லாம்
சில புயல்கள் மையம் கொண்டது.
இயற்க்கை உணர்ந்த காதலை
இனியவளே நீ உணர
என் செய்வேன் நான்.

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

காதலியல்




நீயில்லா நாள் ஒன்றில்
சாலையை கடக்க முயல்கையில்
தன்னிச்சையாய் என் கரம் நீண்டு
உன்னை தேடிய பொழுதில்தான் உணர்ந்தேன்
நீ புறத்தில் அல்ல என் அகத்தில் நிறைந்தவள் என்று.
ஒருவேளை அன்றுதான் உனக்கான
எனது காதலை நான் உணர்ந்திருப்பேனோ.

காத்திருப்பு சுகம்



காதலை சொல்லிவிட்டு நீ
என் பதிலுக்காக காத்திருந்தாய்..
நானோ காதலை
நீயாய் சொல்லட்டும்
என காத்திருந்த
காலத்தை கணக்கிட்டு கொண்டிருந்தேன்.
காத்திரு காதலா சில நாட்களேனும். .
காதலில் காத்திருப்பு சுகமென
நீயும் அறிய வேண்டாமா..

உனக்கான மனம்





உன் பதிலுக்காக காத்திருந்து
மனம் வெதும்பும் சமயங்களில்,
உன் மீதான காதலை
தொடர்வதா, விடுவதா
என்ற கேள்வியை
மனம் எழுப்பும் சமயங்களில்,
வாழ்க்கை என் மீது
ஒற்றை கேள்வியை
வீசி எறிந்து உனக்கான
என் காத்திருப்பை தொடரச் செய்கிறது.
"இனியும் உனக்கு
வாழ்வளிப்பதா இல்லை
உன் வாழ்வழிப்பதா"...

என்ன மாதிரியான உலகம் இது




என்ன மாதிரியான உலகம் இது,
என்னில் பொய்மை கலந்து
தன்னலம் மிகுந்து,
கர்வம் கலந்து,
சுற்றத்தை ஏளனமாய்
பார்த்த போதெல்லாம்
என்னை நம்பி போற்றிய இது,
நான் இவை எல்லாம் கடந்து
உண்மையாக மாறிய பொழுதில்
என்னை தூற்றி தூக்கி எறிகிறது.
இதை நான் மன்னிப்பதா
இல்லை மறப்பதா?
இந்த இரண்டை செய்யவும்
நான் யார் என்ற கேள்வியே பிரதானமாகிறது.
எனை எனக்குறைத்த மனமே
இதற்க்கும் விடை பகர்வாயா??

கவிதை


இரக்கமற்ற பல இரவுகளில்
உறக்கமற்று நான் விழித்திருக்கையில்
உன் நினைவுகள் மட்டுமே வருடலாய்
என்னை ஆட்கொண்டிருந்த வேளைகளில்
நான் உதிர்த்த அர்த்தமற்ற வார்த்தைகள்தான்
இன்று கவிதைகள் என கொண்டாடப்படுகிறது.

காதல்!

இது நடக்கும் என்று நிச்சயத்து
கூறமுடியாத சம்பவங்களில்
மிக முக்கியமான ஒன்று "காதல்".
காத்திருப்பவனுக்கு வருவதில்லை,
ஒதுங்கி செல்பவனை விடுவதில்லை.
காற்று, மழை, புயல்போல்
காதலும் கட்டுப்பாடுகளற்றது.

நீ மட்டும்.

தலைப்பைச் சேருங்கள்

வாய் மூடாமல் உனைப்பற்றி
பேசிக்கொண்டிருக்கும் நான்
உனது சமீபத்தில் மட்டும்
என்றும் ஊமையாகிவிடுகிறேன்.
இரும்புத் துகள்களை
ஈர்த்துகொள்ளும் காந்தம்போல்
எனது வார்த்தைகள் அனைத்தையும்
மொத்தமாய் எடுத்துகொண்டு
செல்லப் புன்னகையுடன் கேட்கிறாய்
என்னிடம் மட்டும்
ஏன் பேசுவதே இல்லை என்று.
எப்படி சொல்வேன் உன்னிடம்
நான் பேசும் நிமிடங்கள் ஒவ்வொன்றிலும்
நீக்கமற நிறைந்திருப்பது
நீ மட்டும்தான் என்று.

புதன், 5 ஜூன், 2013

என் காதல்


 
இரு மலைத்தொடர்களின்
இடைப்பட்ட பள்ளத்தாக்குகள் நிரப்பி
சமவெளிகளில் நிறைந்து
கடல்களில் கலந்து
பெரும் பிரவாகமாக பரவிக்கிடக்கிறது
உனக்கான என் காதல்.
நீயோ மலை முகட்டில் நின்றுகொண்டு
சிதறிய சில துளிகளில் மட்டும் நனைந்து
என் காதலை கண்டுகொண்டேன் என்கிறாய்.
என் காதலை முழுவதுமாய் உணர
உனக்கு ஒரு ஜென்மம் போதாது அன்பே.
ஒவ்வொரு முறை நீ பிறந்து வரும்போதும்
பிரவாகம் கூடிய காதலுடன் உனக்காக காத்திருப்பேன்.

- கௌதமன் ராஜகோபால்

புதன், 16 ஜனவரி, 2013

தேவதை ஜாக்கிரதை!!

நீ வசிக்கும் தெருவின்
எல்லா நுழைவாயில்களிலும்
இப்படித்தான் அறிவிப்பு பலகை
வைக்க வேண்டும்..
"வாலிபர்கள் கவனமாக செல்லவும்
இதயம் தொலையும் பகுதி இது.
தொலையும் இதயங்களுக்கு
இங்கு வாழும் தேவதை பொறுப்பல்ல."

உதிரி !!!

நீ  எப்பொழுதேனும் எனது கவிதைகளை
வாசிக்க நேர்ந்தால் அறிந்துகொள்வாயா?
உன்னைப் பார்க்கும்போதெல்லாம்
ஊமையாகிப்போன ஒருவன்
உன்னுடன் பேசமுடியாமல் போன
வார்த்தைகளில் சிலவற்றை
இங்கே உதிர்த்திருக்கிறான் என்று.

கனவல்ல !!!

என் கனா கானகங்களில்  நிறைந்து
கிடக்கும் அடர்ந்த மௌனத்தின்
அத்தனை துகல்களிலும்
உன் சப்தங்கள் மட்டுமே
நிசப்தமாய் ஒலித்து
என்னை தாளாட்டி கொண்டிருக்கிறது.
பூவின் இதழ் கருகாமல்
பனி திருடும் கிரணங்கள் போல
நான் அறியாமல்
என் மனம் திருடிய மயிலே,
என் உறக்கங்கள் உன் மடிமீது.
கனவல்ல இது காதல்.