அன்று இறுதியாய் கல்லூரி விடுதியில் இருந்து
உன்னை அழைத்துச் செல்ல காத்திருந்தேன்.
என்றும் நீ என்னை நெருங்கும் முன்
என்னை நெருங்கும் உன் வார்த்தைகள் “கிளம்பலாமா?”
இம்முறை அமைதியாய் வந்து
என்னருகில் அமர்ந்திருந்தாய்,
உன் மூச்சின் ஸ்பரிசம் பட்டபோதுதான்
நினைவுகளில் கரைந்திருந்த நான்
நிஜத்திற்க்குள் நழுவினேன்.
அமைதியாய் இருந்து பழக்கமற்ற இருவரும்
ஆரவாரமற்று அமர்ந்திருந்தோம்.
நான் எழுந்து கிழம்ப முயல்கையில்
என் கரம்பற்றி இழுத்து அமர்த்தினாய்,
உன் கண்கள் வழி என்னில் ஊடுருவினாய்,
மனதைத் துளைத்து அதன் ஆழம் நுழைந்து
உள்ளிருப்பதை உணரும் ஆர்வம் கண்டேன் உன்னில்.
ஆயிரம் எண்ணங்கள் மனதில் எழுந்தாலும்
உதடுகள் பூட்டிக்கொண்டதால்
வார்த்தைகள் வாழ்விழந்தது என்னில்.
வெறும் வெறுமை மட்டுமே
நம்மை சூழ்ந்திருப்பதாய் உணர்ந்தேன்.
கரங்களை பற்றியிருந்தவள்
சட்டென கட்டியனைத்தாய்,
நின் கண்கள் சிந்திய கண்ணீரை
என் கன்னங்களில் ஒற்றி எடுத்தாய்,
எதிர்பாரா நிமடத்தில் நெற்றியில்
நின் இதழ் பதித்தாய்,
நிதானித்து நிகழ்வுகளை உணர்வதற்குள்
விட்டு விலகி வாகனத்தை நெருங்கி நின்றாய்,
காரணம் அறியாமல் கண்கள் சிந்திய கண்ணீரில்
மட்டற்ற மகிழ்ச்சியை உள்ளூர உணர்ந்தேன்.
அதுவரை பலமுறை உன்னோடு பயணித்திருந்தும்
நம் காதலுடனான பயணம் தொடங்கியது அன்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக