நட்பெனும் கடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நட்பெனும் கடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

ஒரு தோழியும்.. அவள் தோழனும்.. தோழர்களாய்..



 ஒரு மார்கழி மாத மாலை
உன் தந்தை பணி சுமையினால்
வாராமல் போய் என்னைப் பணித்ததால்
இருவரும் வெளியே சென்றுவிட்டு
திரும்பும் வேளை இரவு கவிந்திருந்தது,
கருமேகங்கள் சூழ்ந்து இடியும் மின்னலுடன்
மழை இப்போது கொட்டி தீர்க்கப்
போகிறேன் என்று மிரட்டி விரட்ட
அந்த புறவழி சாலையில் சற்று
அதிக வேகத்திலேயே வண்டியை ஓட்டினேன்.
மார்கழி பனியும், மழை மேகத்தால்
சில்லிட்ட தென்றலும் குளிரைக் கூட்ட
சட்டென என்னை அணைத்துக் கொண்டு
முதுகில் முகம் பதித்துக் கொண்டாய்,
சற்றே வேகம் குறைத்த போது
என் காதுகளுக்குள் கிசு கிசுத்தாய்..
குளுருதுடா நீ சீக்கிரம் போ..
நானும் எத்தனை வேகமாய் முடியுமோ
அத்தனை வேகமாய் வீடு வந்தேன்.
ஒரு வார இடைவெளியில் மீண்டும்
அதேபோல் செல்ல வேண்டி வந்தபோது
எனக்கும் உனக்குமாய் சேர்த்து இரண்டு
குளிர் தாங்கும் உடைகளை எடுத்து
உன் கரங்களில் தந்த போது
என்னைப் பார்த்து மெலிதாய் புன்னகைத்தாய்,
அதில் என்மீதான உனது புரிதலும்
நம் நட்பின் மீதான நம்பிக்கையும்
பிரதிபலிப்பது சர்வ நிச்சயமாய் தெரிந்தது.
நீ என் தோழி மட்டும்தான்..
நான் உன் உயிரான தோழன் மட்டும்தான்..
ஆனால் அன்று நம்மைக்  கடந்த,
நாம் கடந்த அத்தனை வாகனத்திலும்
வீற்றிருந்த எத்தனை கண்களுக்கு
நம்மை நாமாய் நம் மனோ நிலையில்
கண்கொள்ளக் கூடியிருக்கும் என்பது சந்தேகமே..
நீ என்னை நேரிட்டு அணைத்தாலும்
என் கண்கள் உன் கண்கள் மட்டுமே பார்க்கும்..
நம் உடல்கள் அன்பின் வெப்பம் தாண்டி
காமம் பரிமாறிக் கொள்ளாது.ஏனெனில்  
நீ என் தோழி, நான் உன் தோழன்.
நாம் கொண்டிருப்பது நட்பு..
இதை சந்தேகக் கண்ணோடு அலையும்
சமுதாயப் புண்களுக்கு பறைசாற்ற விருப்பமில்லை.
நம் நட்பை எந்த விழிகளுக்கும் முன்
விசாரணைக் கைதியாய் நிறுத்துவதில் ஆர்வமில்லை.
பூவினும் மெல்லிய இதயம் உன்னுடையது
கூர்வாள் வார்த்தைகள் அதைக் கிழித்தெறிய
ஒருநாளும் சம்மதியேன் பெண்ணே...
நீ தத்தி தத்தி நடந்த காலம் முதல்
கரம் கொடுத்து கூட நின்றவன் நான்.

காலம் உள்ளவரை என் தோழி நீ.
உன் உயிரான தோழன் நான்..  

:- கௌதமன் ராஜகோபால்.




ஞாயிறு, 29 மார்ச், 2015

உறவு கடந்த ஓர் உணர்வு!!!

அன்புள்ள அண்ணனுக்கு
இப்படித்தான் தொடங்க ஆசை
உனக்கான இச்சில வரிகளை....
நீயும் நானும்
தொப்புள்கொடி உறவுமில்லை
தூரத்து உறவுமில்லை...
ஒரே பள்ளியிலோ கல்லூரியிலோ
பயின்று வந்த ஆளுமில்லை...
உன் எல்லையை நானோ
என் எல்லையை நீயோ
மிதித்ததற்க்கான தடயமும் இல்லை..
எங்கும் எப்பொழுதும்
கரங்கள் தொட்டுக் கொள்ளாத
கண்கள் கண்டு முட்டாத
இரு வேறு துருவங்கள் நாம்.
பிறந்த ஊர் விட்டு
எங்கோ தூர தேசத்தில் நீ..
எதற்காகவும் பிறந்த மண்ணை
பிரியாமல் நான்...
எவ்வித தொடர்புமற்ற நம்மை
இவ்விதம் பிணைத்தது எதுவோ!!?
தம்பி என்றென்னை நீ அழைக்கும்
ஒவ்வொரு முறையும்
என் உயிர் உணரும் அவை
வெறும் வார்த்தைகளில்லை
உயிர் உணர்வு எல்லாம்
கலந்த உரிமை என்று...
எங்கிருந்தாய் இத்தனை காலமாய்???
எப்போது சந்திப்பேன் உன்னை???
காத்திருக்கிறேன் கனவுகளுடன்...

 வெறும் கனவுகளல்ல அவை
உனக்கான என் பாசத்தின் பதிவலைகள்..
நேற்று என்னை உன் கனவுகளில்
கண்டதாய்க் கூறினாய்!
நானே அறியாமல் என் உணர்வுகள்
உன்னைத் தொடர்பு கொண்டிருக்குமோ?
இன்னும் சரியாய் விளங்காதது
ஒன்று மட்டும் தான்..
இணையத்தில் எழுத்துக்கள் மூலம்
அறிமுகமான நம் இதயங்கள்
இப்படி இணைந்து போனது எப்படி?!!
எத்தனை தேடியும் விடையில்லா கேள்வியிது..
எந்த ஜென்மத்தின் மிச்சமோ இது நானறியேன்.
ஒரு வேளை நாம் இருவரும் ஒரு சேர நம்பும்
நம் ஈசன் அறிவானோ??
வாழ்வின் விடைகளற்ற எண்ணற்ற கேள்விகளுடன்
இதுவும் இணைந்து போகட்டும்...
உன்னைக் கட்டியணைக்க
காத்திருக்கும் கரங்களையும்
கன்னம் பதிக்க காத்திருக்கும்  இதழ்களையும்
நீண்ட நாட்கள் காத்திருக்க வைத்துவிடாதே
என் சகோதரா!!! விரைந்து வா!!


:- கௌதமன் ராஜகோபால்

திங்கள், 23 செப்டம்பர், 2013

இரவின் வெறுமை!


என் உறங்கா இரவுகளின்
கருமைகளை  மையாக்கி
என்னுள் நிறைந்த வெறுமையினை
வார்த்தைகளாய்ச்  சமைத்து
நீ என்னவள் என்று உரிமை பாடும்
கவிதைகளை அனுதினம்
எழுதிக்கொண்டே இருக்கிறேன்.
வாழ்வின் எதாவது ஒருநாளில்
ஒரு கணநேரம் அவை உன் கண்ணில்
படாமலா போய்விடும்,
அப்படி எனது ஒரு கவிதையை
நீ வாசித்து முடிக்கும் நிமிடம்
என் வெறுமைகள் முழுதும் நீ நிறைவாய்
என் இரவுகள் அனைத்திலும் நிலவாய் நீ இருப்பாய்
கடந்து வந்த பாதை முழுவதும் மலர் நிரப்பி
நினைவுகளில் உன் கரம்பிடித்து நான் நடப்பேன்.
அந்தச் சில நாழிகை போதும்
என் காதல் முழுமை பெற.
அதுவரை உறங்கா இரவுகளில்
நிறைந்த வெறுமைகளோடு 
கரைந்துகொண்டிருப்பேன் நான்
உனக்கான காதலைச் சுமந்துகொண்டு.

வெள்ளி, 31 ஜூலை, 2009

கல்வெட்டு


மழை சாரலில்
கரும்பலகை எழுத்துக்கள்
கரைந்தோடலாம்,
கல்வெட்டுக்கள் கரைவதில்லை,
அவை ஒவ்வொரு மழையிலும் புதுபிக்கப்படும்..
நம் நட்பு ஓர் கல்வெட்டு,
இனிவரும் காலங்களில்
நம் நினைவுத்தூரல்கள்
அதை புதுப்பிக்கட்டும்..

சனி, 25 ஜூலை, 2009

போய் வா நட்பே!!


வாழ்க்கை உனை அழைக்கிறது,
உனைப்பிரிய உடன்பாடில்லை என்றாலும்
உண்மை உணர்கிறேன்!!
போய் வா நட்பே!!
நிஜத்தில் நீ எங்கிருந்தாலும்
நினைவுகளில் என்றென்றும்
என்னுள் நீ!!!...

இதயத்தோழன்


கடல் கடந்து சென்றுவிட்டாய் நீ..
கடல் அளவு அழுதுவிட்டேன் நானும்..
உடல் இடம் மாறியிருக்கலாம்,
இதயம் இனம் மாறவில்லை..
இன்றும் என்னுயிரில் நீ..,
உன்னுயிரில் நான்..,
நாம் வாழும் தூரம் கூடிவிட்டாலும்
நம் இதயங்கள் கட்டிக்கொண்டதாய் ஓர் உணர்வு...
வாழ்ந்து விடுவேன் இப்படியே..,
நீ வரும்வரை என் வாழ்க்கையை!!!

வெள்ளி, 24 ஜூலை, 2009

வரமான நட்பு!


அந்நாட்களில் மக்கள்
கடுந்தவம் செய்தார்களாம்
வரங்களைப்பெற...,
என்ன தவம் செய்தேன் நான்
உன்னுடனான இந்த நட்பைப்பெற..

உன்னோடு நான்!!!


மழையில்லா காலங்களில்
மரங்களெல்லாம் இலைகள்
இல்லாமல் போய்விடுமே,
அதுபோல்தான்
நீ இல்லாத இந்த நாட்களில்
என் நினைவுகள் இங்கில்லாமலே
போய்விட்டேன் நானும்...