ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

நிஜம்.




ஒவ்வொரு நாளும்
காலை எழுந்ததும் நீ அறியாமல்
உன் கரங்களை  என் மீதிருந்து நகர்த்தி
அவசர அவசரமாக அந்த நாளுக்காய்
என்னை தயார் செய்துகொண்டு
அலுவலகம் அடைந்து
கணினியின் திரையிலும்
கோப்புகளின் பக்கங்களிலும் புதைந்து
அடுத்திருப்பவருக்கு ஒரு
புன்னைகையை கூட பகிர நேரமில்லாமல்
வேலையில் புதையும் வேளையிலும்
ஏதோவது ஒரு நொடியில்
ஏதோ ஒரு மூலையில்
உன் நினைவுகள் தீண்டாமல் இருந்ததில்லை.
நாளின் ஓட்டம் முடிந்து ஓய்ந்துபோய் வீடு வந்து
உள் நுழைந்து அமரும் வேளையில்
திறந்த உடன் ஓடி வந்து உடல் புகுந்து சில்லிடும்
மழைகால மாலையின் சன்னல் காற்றாய்
நொடிகூட தாமதிக்காமல்
சட்டென என் மீது படர்ந்து கொள்கிறாய்.
இப்படி இருக்க எப்படி நம்புவேன் நான்
நீ என் வாழ்வில் இல்லை என்று.





வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

புரிதல்


கடவுளுக்கும் காதலுக்கும்
அத்தனை பெரிய
வித்யாசம் ஒன்றும் இல்லை.
இரண்டிலும் அதன்
இருப்பை உணர்ந்த பின்
இல்லாமலே போகிறோம் நாம்.

புதன், 21 ஆகஸ்ட், 2013

நீயற்றும் உன்னுடன்




சிதிலமான என் வாழ்க்கையை
காதலெனும் பதத்தால் செப்பனிட்டாய்.
உன் உணர்வுகாளால்
என்னில் உயிர் நிறைத்தாய்.
வெறும் கனவு கூடாதென்று
கனவாய் இருந்த வாழ்வை
உயிர்ப்புடன் வாழவைத்தாய்.
என்னை சுற்றி இயங்கும் உலகின்
ஒவ்வொரு அசைவிலும் நீ நிறைந்தாய்.
எல்லாமுமாய் இருந்து
சட்டென ஒரு நாள் இல்லாமலும் போனாய்.
எங்கு ஏன் சென்றாய் என்ற
விடையறியாக் கேள்விகளுக்குள்
என்னை தள்ளிவிட்டு
காணாமல்தான் போயிருந்தாய் நீ.
இருப்பினும் உயிர்ப்புடன் வாழ்கிறேன் நான்.
நீ எனக்காக விட்டுச்சென்ற
உன் நினைவுகளே எங்கும் நிறைந்திருக்கும்
ஒரு நிசப்தமான உலகத்தில்.
உனக்கான என் காதலுக்கு
நீ வேறாய் நின் நினைவுகள் வேறாய்
பகுக்கத் தெரிந்ததில்லை
அன்றும் இன்றும் என்றும்.

சனி, 17 ஆகஸ்ட், 2013

தூது !!!



என்னவளுக்காய் எண்ணிலடங்கா
கவிதைகள் புனைந்துகாற்றினில் தூதனுப்பினேன்,
உன் நினைவுகளின்  வேதனையில்
என் உணர்வுகளின் ஊடலில்
வார்த்தைகளின் வீரியம் கூடியபோதேல்லாம்
சில புயல்கள் மையம் கொண்டது.
இயற்க்கை உணர்ந்த காதலை
இனியவளே நீ உணர
என் செய்வேன் நான்.

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

காதலியல்




நீயில்லா நாள் ஒன்றில்
சாலையை கடக்க முயல்கையில்
தன்னிச்சையாய் என் கரம் நீண்டு
உன்னை தேடிய பொழுதில்தான் உணர்ந்தேன்
நீ புறத்தில் அல்ல என் அகத்தில் நிறைந்தவள் என்று.
ஒருவேளை அன்றுதான் உனக்கான
எனது காதலை நான் உணர்ந்திருப்பேனோ.

காத்திருப்பு சுகம்



காதலை சொல்லிவிட்டு நீ
என் பதிலுக்காக காத்திருந்தாய்..
நானோ காதலை
நீயாய் சொல்லட்டும்
என காத்திருந்த
காலத்தை கணக்கிட்டு கொண்டிருந்தேன்.
காத்திரு காதலா சில நாட்களேனும். .
காதலில் காத்திருப்பு சுகமென
நீயும் அறிய வேண்டாமா..

உனக்கான மனம்





உன் பதிலுக்காக காத்திருந்து
மனம் வெதும்பும் சமயங்களில்,
உன் மீதான காதலை
தொடர்வதா, விடுவதா
என்ற கேள்வியை
மனம் எழுப்பும் சமயங்களில்,
வாழ்க்கை என் மீது
ஒற்றை கேள்வியை
வீசி எறிந்து உனக்கான
என் காத்திருப்பை தொடரச் செய்கிறது.
"இனியும் உனக்கு
வாழ்வளிப்பதா இல்லை
உன் வாழ்வழிப்பதா"...

என்ன மாதிரியான உலகம் இது




என்ன மாதிரியான உலகம் இது,
என்னில் பொய்மை கலந்து
தன்னலம் மிகுந்து,
கர்வம் கலந்து,
சுற்றத்தை ஏளனமாய்
பார்த்த போதெல்லாம்
என்னை நம்பி போற்றிய இது,
நான் இவை எல்லாம் கடந்து
உண்மையாக மாறிய பொழுதில்
என்னை தூற்றி தூக்கி எறிகிறது.
இதை நான் மன்னிப்பதா
இல்லை மறப்பதா?
இந்த இரண்டை செய்யவும்
நான் யார் என்ற கேள்வியே பிரதானமாகிறது.
எனை எனக்குறைத்த மனமே
இதற்க்கும் விடை பகர்வாயா??

கவிதை


இரக்கமற்ற பல இரவுகளில்
உறக்கமற்று நான் விழித்திருக்கையில்
உன் நினைவுகள் மட்டுமே வருடலாய்
என்னை ஆட்கொண்டிருந்த வேளைகளில்
நான் உதிர்த்த அர்த்தமற்ற வார்த்தைகள்தான்
இன்று கவிதைகள் என கொண்டாடப்படுகிறது.

காதல்!

இது நடக்கும் என்று நிச்சயத்து
கூறமுடியாத சம்பவங்களில்
மிக முக்கியமான ஒன்று "காதல்".
காத்திருப்பவனுக்கு வருவதில்லை,
ஒதுங்கி செல்பவனை விடுவதில்லை.
காற்று, மழை, புயல்போல்
காதலும் கட்டுப்பாடுகளற்றது.

நீ மட்டும்.

தலைப்பைச் சேருங்கள்

வாய் மூடாமல் உனைப்பற்றி
பேசிக்கொண்டிருக்கும் நான்
உனது சமீபத்தில் மட்டும்
என்றும் ஊமையாகிவிடுகிறேன்.
இரும்புத் துகள்களை
ஈர்த்துகொள்ளும் காந்தம்போல்
எனது வார்த்தைகள் அனைத்தையும்
மொத்தமாய் எடுத்துகொண்டு
செல்லப் புன்னகையுடன் கேட்கிறாய்
என்னிடம் மட்டும்
ஏன் பேசுவதே இல்லை என்று.
எப்படி சொல்வேன் உன்னிடம்
நான் பேசும் நிமிடங்கள் ஒவ்வொன்றிலும்
நீக்கமற நிறைந்திருப்பது
நீ மட்டும்தான் என்று.