ஞாயிறு, 29 மார்ச், 2015

உறவு கடந்த ஓர் உணர்வு!!!

அன்புள்ள அண்ணனுக்கு
இப்படித்தான் தொடங்க ஆசை
உனக்கான இச்சில வரிகளை....
நீயும் நானும்
தொப்புள்கொடி உறவுமில்லை
தூரத்து உறவுமில்லை...
ஒரே பள்ளியிலோ கல்லூரியிலோ
பயின்று வந்த ஆளுமில்லை...
உன் எல்லையை நானோ
என் எல்லையை நீயோ
மிதித்ததற்க்கான தடயமும் இல்லை..
எங்கும் எப்பொழுதும்
கரங்கள் தொட்டுக் கொள்ளாத
கண்கள் கண்டு முட்டாத
இரு வேறு துருவங்கள் நாம்.
பிறந்த ஊர் விட்டு
எங்கோ தூர தேசத்தில் நீ..
எதற்காகவும் பிறந்த மண்ணை
பிரியாமல் நான்...
எவ்வித தொடர்புமற்ற நம்மை
இவ்விதம் பிணைத்தது எதுவோ!!?
தம்பி என்றென்னை நீ அழைக்கும்
ஒவ்வொரு முறையும்
என் உயிர் உணரும் அவை
வெறும் வார்த்தைகளில்லை
உயிர் உணர்வு எல்லாம்
கலந்த உரிமை என்று...
எங்கிருந்தாய் இத்தனை காலமாய்???
எப்போது சந்திப்பேன் உன்னை???
காத்திருக்கிறேன் கனவுகளுடன்...

 வெறும் கனவுகளல்ல அவை
உனக்கான என் பாசத்தின் பதிவலைகள்..
நேற்று என்னை உன் கனவுகளில்
கண்டதாய்க் கூறினாய்!
நானே அறியாமல் என் உணர்வுகள்
உன்னைத் தொடர்பு கொண்டிருக்குமோ?
இன்னும் சரியாய் விளங்காதது
ஒன்று மட்டும் தான்..
இணையத்தில் எழுத்துக்கள் மூலம்
அறிமுகமான நம் இதயங்கள்
இப்படி இணைந்து போனது எப்படி?!!
எத்தனை தேடியும் விடையில்லா கேள்வியிது..
எந்த ஜென்மத்தின் மிச்சமோ இது நானறியேன்.
ஒரு வேளை நாம் இருவரும் ஒரு சேர நம்பும்
நம் ஈசன் அறிவானோ??
வாழ்வின் விடைகளற்ற எண்ணற்ற கேள்விகளுடன்
இதுவும் இணைந்து போகட்டும்...
உன்னைக் கட்டியணைக்க
காத்திருக்கும் கரங்களையும்
கன்னம் பதிக்க காத்திருக்கும்  இதழ்களையும்
நீண்ட நாட்கள் காத்திருக்க வைத்துவிடாதே
என் சகோதரா!!! விரைந்து வா!!


:- கௌதமன் ராஜகோபால்

கனவாய் ஒரு வாழ்வு!!

வாழ்வை சுகமாய் வாழ்வதற்க்கென்றே
கனவுகள் கண்டங்கு கல்வி பயின்று
கடும் முயற்சிகள் கொண்டு
ஓர் பணியில் அமர்ந்தேன்!!!
பணியினிற்ப் போக மீதி நேரம் இருந்தால்
வாழ்ந்துகொள் என்று பணிக்கப்பட்டிருக்கிறேன்!!!

:- கௌதமன் ராஜகோபால்

எங்கே நான்??

நீ மட்டும் இல்லாமல் இருந்திருந்தால்
நான் என்பது நாமாகாமல் போயிருந்தால்
நீ அன்றி வேறொரு உலகமும்
உண்டென்பதை நான் உணர்ந்திருந்தால்
இன்று இத்தனிமை என்னை வாட்டாதிருந்திருக்குமோ???
உன்னில் தொலைந்த என்னை
எங்கே மீட்டெடுப்பேன்???

:- கௌதமன்ராஜகோபால்

சனி, 28 மார்ச், 2015

உறவுகள்!!

நிறைந்தது!!!!
இல்லம் நிறைந்த போது
உள்ளமும்...
உறவுகள் சென்றபின்
கண்களும்....

:- கௌதமன் ராஜகோபால்