திங்கள், 23 செப்டம்பர், 2013

இரவின் வெறுமை!


என் உறங்கா இரவுகளின்
கருமைகளை  மையாக்கி
என்னுள் நிறைந்த வெறுமையினை
வார்த்தைகளாய்ச்  சமைத்து
நீ என்னவள் என்று உரிமை பாடும்
கவிதைகளை அனுதினம்
எழுதிக்கொண்டே இருக்கிறேன்.
வாழ்வின் எதாவது ஒருநாளில்
ஒரு கணநேரம் அவை உன் கண்ணில்
படாமலா போய்விடும்,
அப்படி எனது ஒரு கவிதையை
நீ வாசித்து முடிக்கும் நிமிடம்
என் வெறுமைகள் முழுதும் நீ நிறைவாய்
என் இரவுகள் அனைத்திலும் நிலவாய் நீ இருப்பாய்
கடந்து வந்த பாதை முழுவதும் மலர் நிரப்பி
நினைவுகளில் உன் கரம்பிடித்து நான் நடப்பேன்.
அந்தச் சில நாழிகை போதும்
என் காதல் முழுமை பெற.
அதுவரை உறங்கா இரவுகளில்
நிறைந்த வெறுமைகளோடு 
கரைந்துகொண்டிருப்பேன் நான்
உனக்கான காதலைச் சுமந்துகொண்டு.

கருத்துகள் இல்லை: