திங்கள், 30 செப்டம்பர், 2013

நிழலான நினைவுகள் !!

துணையற்ற பயணம்,
அந்தி மாலை, சன்னல் ஓரம்
மலைச்சாரல் காற்றின் தேவானுபவம்,
அரசுப் பேருந்தின்
ஆரவாரமற்ற வேகத்தில்
மெல்லிய சாரலை உள்வாங்கி
உயிர்படர விட்ட வேளை
இரைச்சலைத் தாண்டி
இளையராஜா தன் மெல்லிசையால்
காதலைக்  கனியவிட
சட்டென சுற்றம் கரைந்து
இமைகள் தானாய் மூடிக்கொள்ள
ஏதோ ஒரு சக்தி என்னை
நிகழ்காலத்தில் இருந்து
பழமைக்குள்  இழுத்துச்செல்ல
ஏதேதோ எண்ணங்கள்
என்னில் நிறைந்து நிறைந்து
என்னை என்னுள்ளே
கரைத்துக் கொண்டிருந்தது.
கடந்த கால நினைவுகளில்
காணமல் போவது ஒரு சுகம்,
வலிகள் நிறைந்த ஒரு நித்திய சுகம்.
கண்களின் ஈரத்தை
இமைகள் உணர்ந்த பொழுதில்
சட்டென வெளிப்பட்டேன்.
கன்னங்கள் நனைத்த கண்ணீர்
மெல்லிய தென்றலில் சில்லிட்ட நேரம்
என்னவளின் இதழ்கள் இயம்பிய
ஈரத்தை மீட்டெடுத்து
மீண்டும் அமிழ்த்தியது பழமைகளுக்குள்.
இசையுடன் தொடர்ந்தது பயணம்,
இம்முறை பயணித்தது தனியாய் அல்ல
நான், என்னவள் மற்றும் இளையராஜா.




புதன், 25 செப்டம்பர், 2013

மின்னல் புன்னகை

 
வனப்பு மிக்க வார்த்தைகளால்
பொருள் பொதிந்த வார்த்தைகளால்
அழகழகான வார்த்தைகளால்
தேடித் தேடி உன்னை பற்றி
அழகான கவிதை ஒன்றை
படைத்துவிட்டோம் என்று
ஆனந்தக் கூத்தாடி
நீ வாசிக்கக் கொடுப்பேன்
வாசித்து முடிக்கையில்
உன்னில் உதிக்கும்
சிறு மின்னல் புன்னகையில்
சகலமும் சரிந்து உன் பாதங்களில் பணிந்துவிடும்.
உலகின் எந்த அழகை அருகே வைத்தாலும்
நீ பூக்கும் புன்னகையே
எல்லாவற்றையும் விட அழகாய்த் தோன்ற
உன்னைவிட அழகான கவிதை
எழுத எங்கிருந்து வார்த்தைகள் தேட.
இருப்பினும் மீண்டும் தேடலை தொடர்கிறேன்
மீண்டும் ஒரு அழகான கவிதைக்காய்
அதனினும் அழகான நின் புன்னகைக்காய்.
 

திங்கள், 23 செப்டம்பர், 2013

இரவின் வெறுமை!


என் உறங்கா இரவுகளின்
கருமைகளை  மையாக்கி
என்னுள் நிறைந்த வெறுமையினை
வார்த்தைகளாய்ச்  சமைத்து
நீ என்னவள் என்று உரிமை பாடும்
கவிதைகளை அனுதினம்
எழுதிக்கொண்டே இருக்கிறேன்.
வாழ்வின் எதாவது ஒருநாளில்
ஒரு கணநேரம் அவை உன் கண்ணில்
படாமலா போய்விடும்,
அப்படி எனது ஒரு கவிதையை
நீ வாசித்து முடிக்கும் நிமிடம்
என் வெறுமைகள் முழுதும் நீ நிறைவாய்
என் இரவுகள் அனைத்திலும் நிலவாய் நீ இருப்பாய்
கடந்து வந்த பாதை முழுவதும் மலர் நிரப்பி
நினைவுகளில் உன் கரம்பிடித்து நான் நடப்பேன்.
அந்தச் சில நாழிகை போதும்
என் காதல் முழுமை பெற.
அதுவரை உறங்கா இரவுகளில்
நிறைந்த வெறுமைகளோடு 
கரைந்துகொண்டிருப்பேன் நான்
உனக்கான காதலைச் சுமந்துகொண்டு.

வியாழன், 12 செப்டம்பர், 2013

என்னவள்





அன்று இறுதியாய் கல்லூரி விடுதியில் இருந்து
உன்னை அழைத்துச் செல்ல காத்திருந்தேன்.
என்றும் நீ என்னை நெருங்கும் முன்
என்னை நெருங்கும் உன் வார்த்தைகள் “கிளம்பலாமா?
இம்முறை அமைதியாய் வந்து
என்னருகில் அமர்ந்திருந்தாய்,
உன் மூச்சின் ஸ்பரிசம் பட்டபோதுதான்
நினைவுகளில் கரைந்திருந்த நான்
நிஜத்திற்க்குள் நழுவினேன்.
அமைதியாய் இருந்து பழக்கமற்ற இருவரும்
ஆரவாரமற்று அமர்ந்திருந்தோம்.
நான் எழுந்து கிழம்ப முயல்கையில்
என் கரம்பற்றி இழுத்து அமர்த்தினாய்,
உன் கண்கள் வழி என்னில் ஊடுருவினாய்,
மனதைத் துளைத்து அதன் ஆழம் நுழைந்து
உள்ளிருப்பதை உணரும் ஆர்வம் கண்டேன் உன்னில்.
ஆயிரம் எண்ணங்கள் மனதில் எழுந்தாலும்
உதடுகள் பூட்டிக்கொண்டதால்
வார்த்தைகள் வாழ்விழந்தது என்னில்.
வெறும் வெறுமை மட்டுமே
நம்மை சூழ்ந்திருப்பதாய் உணர்ந்தேன்.
கரங்களை பற்றியிருந்தவள்
சட்டென கட்டியனைத்தாய்,
நின் கண்கள் சிந்திய கண்ணீரை
என் கன்னங்களில் ஒற்றி எடுத்தாய்,
எதிர்பாரா நிமடத்தில் நெற்றியில்
நின் இதழ் பதித்தாய்,
நிதானித்து நிகழ்வுகளை உணர்வதற்குள்
விட்டு விலகி வாகனத்தை நெருங்கி நின்றாய்,
காரணம் அறியாமல் கண்கள் சிந்திய கண்ணீரில்
மட்டற்ற மகிழ்ச்சியை உள்ளூர உணர்ந்தேன்.
அதுவரை பலமுறை உன்னோடு பயணித்திருந்தும்
நம் காதலுடனான பயணம் தொடங்கியது அன்று.