ஞாயிறு, 30 நவம்பர், 2014

எண்ணம், செயல் மற்றும் அதன் விளைவு இதில் எது நமது?? பாகம் - 2



அனுபவம் அது கொடுக்கும் பாடம் ஒவ்வொன்றும் வாழ்க்கையின் தேடலுக்கான படிக்கல்கள். நோக்கம் எதுவாயினும் இறுதியில் நாம் அடைவது நமக்கானதை மட்டும் தான். இந்த நிமிடம் இந்த நிகழ்வு இந்த அனுபவம் தவிர்க்க இயலாதது. ஆம். நாம் ஆயிரம் கற்பனைகள் செய்யலாம். அதில் ஒன்று கூட நடவாமல் போகலாம். நாம் எதிர் பார்க்காத ஒன்று நடந்தேறலாம். அதற்க்கு காரணம். அதை சிலர் விதி என்பர். நான் அதைத்தான் வாழ்வென்பேன். 

வாழ்க்கை மிக மிக அழுத்தமான சூட்சும முடிச்சுகளைக் கொண்டது. அது தானை அவிழும், அதற்க்கான காரண காரியங்களை மட்டுமே நம்மைக் கொண்டு செய்விக்கும். புரிந்து கொள்வது அவ்வளவு எளிதானது அல்ல. சில நேரங்களில் நமக்கு சில எண்ணங்கள் தோன்றலாம். சட்டென உதித்த எண்ணத்தை நாம் உதாசீனம் செய்துவிட்டு வேறு பல காரியங்களை செய்ய திட்டமிடலாம். இறுதியில் நடப்பது ஆதியில் தோன்றியதாய் இருக்கும். நமக்கே தெரியாமல் நடந்தேறும் அது. காரணம் என்னவாயிருக்கும்? ஒரு விசயத்தை நாம் தொடங்க நினைக்கையில் சட்டென ஒரு எண்ணம் உதித்து மறைகையில் அது ஆதியாய் நிற்பவனின் வழிகாட்டல் என்றுணர்க. ஆம், இது எனக்கு என் குரு ஒருவர் உரைத்த உபதேசம். நாம் எப்பொழுதும் உள்ளும் புறமும் விழிப்புடன் இருப்பது அவசியம். காரணம் பல நேரங்களில் நாம் ஏதாவது செய்ய விளைகையில் அல்லது அதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கையில் நம் மனதிடம் கவனம் வைப்பதில்லை. எனவே நமக்கான செய்தி எதுவாயினும் அது புற உலகத்திடம் இருந்து வருகிறது.

அது எப்படி புற உலகத்திடம் இருந்து வரும் என்ற கேள்வி என்னை எட்டுகிறது. நானும் என் குருவிடம் கேட்க்காமல் இல்லை. அவர் கூறிய விஷயம் ஆச்சர்யமானது. நாம் ஒரு விசயத்தை யோசித்துக் கொண்டிருக்கும்போதோ அல்லது பேசிக்கொண்டிருக்கும் போதோ நம்மை கடந்து செல்லும் யாரவது ஒருவர் அவருக்கே தெரியாமல் அவரது சம்பாசனைகளில்  சில வார்த்தைகளை சத்தமாய் உரைத்துவிட்டு செல்ல கூடும், அது நம்மை எட்டும் அளவுக்கு இருக்கும். அதிலிருந்து குறிப்புணர வாய்ப்புகள் அதிகம். இல்லையென்றால் யாரவது ஒருவர் சம்பந்தமே இல்லாமல் வந்து நம்மிடம் எதாவது பேசிவிட்டு செல்வர். நாம் அவரை பைத்தியம் என்று கூட நினைக்க வாய்ப்பிருக்கும். இது பலருக்கு நிகழ்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் நாம் அவைகளின் மீது அதிக கவனம் செலுத்துவதில்லை. இப்படி புற உலகத்தில் வரும் சமிக்கைகைளின் மூலம் பல விஷயங்கள் உணர்த்தப்படுமாம். எனவே புலன்களை திறந்து வை என்பார் அவர். சுற்றி இயல்பாய் நடக்கும் விசயங்களை கவனிக்க தவறுதல் கூடாது.

அது போலத்தான் வெகு சில நேரங்களில் மனம் அமைதியாய் இருக்கும்போது யாரவது எதாவது கேட்கும்போதோ அல்லது நாம் செய்வதை பற்றி சிந்திக்கும் போதோ  சட்டென ஒரு எண்ணம் எழும். அவையும் அப்படித்தான். எனவே எப்பொழுதும் உள்ளும் புறமும் விழிப்புடன் இருப்பது அவசியம்.
அன்று தை பொங்கல் இரண்டாம் நாள், பௌர்ணமி. முந்தைய நாள் எனது மகர ஜோதி விரதம் பரிபூரண பூர்த்தி அடைந்ததும், அம்மையப்ப்னும், அய்யப்பனும் என்னை வாரி அனைத்த உணர்வையும் முந்தைய பதிவில் பகிர்ந்திருந்தேன். இன்று மறுநாள் பௌர்ணமி எனது மாத விரத நாள். காலை எழும்போதே எனது இரண்டு மாமாக்களும் என் படுக்கையின் அருகில் அமர்ந்து அன்றைய திட்டம் என்ன என்பது பற்றி பேசிக்கொண்டிருந்தனர். நான் கண் விழித்தவுடன் என்னை அவர்கள் இன்று எல்லோரும் எங்காவது சென்று வரலாம். இதுவரை போகாத புதிய இடமாய் இருக்கட்டும், கோவிலாய் இருந்தாலும் சரி என்றனர். சட்டென மனதில் தோன்றியது காங்கேயம் சிவன் மலை, அல்லது சென்னிமலை இரண்டுமே மகன் சுப்பிரமணியர் அழகனான முருகன் அருள் பொங்கும் மலைதான். நினைப்பதற்கு முன் இதழ்கள் உதிர்த்து முடித்திருந்தது. அரைத்தூக்கத்தில் இன்னும் சரியாக கண் கூட விழிக்காத நேரத்தில் எப்படி நான் இதை சொல்லி இருக்க முடியும். சொல்லியானது. அதன் பிறகு நடந்தவைகள்தான் இன்னும் அதிசயம். 

வேறு சில இடங்களையும் அலசி ஆராய்ந்துவிட்டு பின் முடிவு செய்யலாம் என்றனர் இருவரும். குளித்து முடித்து நிதயகர்ம பூஜைகளை நிறைவேற்றி அமர்ந்தபோது, இணையத்தில் அருகிலிருக்கும் சில சுற்றுலா தளங்களை பற்றி விவரம் சேகரிக்க அமர்த்தப்பட்டேன். திருமூர்த்திமலை, பொள்ளாச்சியிலிருந்து சற்று உள்ளே சென்றால் அடர் வனத்தினூடே ஒரு உயிரியல் பூங்கா உள்ளது. இந்திரா காந்தி தேசிய உயிரியல் பூங்கா அது. அடர் காடு, நிறைய மிருகங்கள், எழில் கொஞ்சும் பசுமை, ஏகாந்தமான இயற்க்கை. இவை இரண்டும் தேர்வு செய்யப்பட்டு அதில் உயிரியல் பூங்கா என தீர்மானிக்கப் பட்டது.  மதியம் நெருங்க திடிரென அவர்களுக்கே சந்தேகம் ஒருவேளை இன்று அரசு விடுமுறை என்பதால் அங்கு யாரும் இல்லை என்றால் அத்துனை தூரம் சென்றது வீனாகிவிடாதா?? உடனே உயிரியல் பூங்காவின் தொலைபேசி என்னை இணையத்தில் பெற்று முயன்றால் பதில் இல்லை. அரசு அலுவலகமாயிற்றே அதுவும் அரசு விடுமுறை நாளில். சரி என்ன செய்வது என்று முடிவு செய்ய மீண்டும் பேச திருமூர்த்தி மலை செல்லலாம் என்றனர். சரி என்றேன். இரு சகோதரிகளும் கிளம்ப சற்று நேரம் ஆயிற்று. இறுதி பத்து நிமிடத்தில் மாமா கேட்டார் அங்கு சென்றாலும் மாலை நெருங்குவதால் சரியாக வராது என்றார். என்ன செய்வது. எல்லோரும் கிளம்பியானது. சரி காரில் ஏறுங்கள் எங்காவது செல்வோம் என்று கிளம்பி நேராக பல்லடம் உடுமலைபேட்டை சாலையில் உள்ள சித்தம்பலம் என்னும் இடத்தில் அமைத்துள்ள நவகிரக கோட்டைக்கு சென்றோம். அது ஒரு தியான மண்டபம். எல்லா ராசிகளும், நட்சத்திரங்களும் வட்ட வடிவில் வீற்றிருக்க மிக பிரம்மாண்டமான லிங்க ரூபம் மத்தியில் அமைந்திருக்கும். ரம்மியமானதொரு இடம். அமைதியான சூழலில் அமைந்த அற்புதமான தியான மண்டபம்.


அதற்க்கு முன் வீட்டிலிருந்து கிளம்பும் முன்பே தந்தை கூறியது ஒரு வேலை நீங்கள் சிவன்மலை சென்றால், அங்கிருந்து சென்னிமலை செல்வது எளிதாக இருந்தால் சென்று வாருங்கள் என்று. தியான மண்டபத்தில் ஒரு சில மணித்துளிகள் அந்த ஆதியோடு ஐக்கியமாகி அந்த இடத்தின் தெய்வீக தாக்கத்தில் கலந்திருந்துவிட்டு, பல்லடம் வந்து என்னை தவிர்த்து மற்றவர்கள் மதிய உணவு முடித்தார்கள். அங்கிருந்து காங்கேயம் செல்லலாம், இப்போது மணி 3 கிளம்பினால் மாலை நடை திறப்புக்கு செல்ல சரியாய் இருக்கும் என முடிவெடுத்தோம்.
வண்டி நேராக காங்கேயம் சாலையில் விரைந்தது. கோவிலின் அடிவாரம் நெருங்கிய போது ஒரு எண்ணம், படியில் செல்லலாம் என்று. மற்ற அனைவரையும் காரிலேயே மேலே வர சொல்லி நானும் என் சகோதரியும் மகன் மட்டும் படி வழி ஏறினோம். எனக்கு படியில் செல்லவேண்டும் என்று தோன்றியதன் காரணம். மன ஒருநிலைப்படுத்த, தியானம் கிட்ட. ஆம் மலையில் கோவில் அமைத்ததற்கு இன்னொரு காரணம் இதுவாகக் கூட இருக்க்கலாம். பொதுவாக நாம் தியானத்தில் அமரும் பொழுது மனது அங்கு இங்கென்று அலை பாயும். ஆரம்ப காலங்களில். அப்பொழுது அதை இழுத்து கட்ட நாம் உபயோகிப்பது எதுவென்று நாம் அறிந்ததே. மூச்சு. அதை சற்று அழுத்தமாக உள்ளிழுத்து வெளியேற்றினால் சிதறிய எண்ணங்கள் புருவ மத்தியில் வந்து சேரும். இது மலை ஏறும் பொழுதில் இயல்பாய் அமையும். மூச்சை உள்ளிழுத்து வெளியேற்றி மலையேறும் சமயங்களில் அங்கு ஒரு தியானம் நிகழத் துவங்குகிறது. எண்ணங்கள் குவியத் தொடங்குகிறது. பௌர்ணமி விரதம், மாலையில் அம்மையப்பனை காண கோவில் செல்வது வழக்கம், அதற்க்கு முன்பு சிறிது நேரம் தியானம் செய்ய முடிந்தால் மிக்க மகிழ்ச்சி. வாய்ப்பு கிடைத்தது. படி வழி சென்றேன். மேலே சென்று சுற்றி வரும் வழியில் அம்மையப்பனை தரிசித்தேன் மெய் சிலிர்த்தேன். உள்ளே பிரகாரம் சென்று நாங்கள் பூஜை பொருட்களை தந்த அர்ச்சகர் வர  காத்திருந்தோம். எங்கு சென்றாரோ சற்று நேரமானது அவர் வர. தீப தரிசனம் முடிந்த நேரம், அங்கு அபிசேக பூஜைக்கு தயாராவதாய் தோன்றியதால் தாமதித்தோம். ஆம் சிறப்பானதொரு அபிசேக பூஜை  தரிசனம் தந்தார் சிவன்மலை அழகன் முருகன். வெளியே வந்து காரின் அருகில் வந்த பொது எங்களுக்கு பின் மயில் வாகனன் தரினம் தந்தார். முருகன் கோவிலில் மயிலின் தரிசனம் அற்புதமானது. எல்லோருக்கும் கிடைக்கபெறாதது. திருப்பம் வரை வந்த பொழுது முழு நிலவின் தரிசனம். என்னை பொறுத்தவரையில் அது அம்மையப்பனின் தரிசனம். அம்மாவின் அற்புத ரூபம். நான் விரதம் துடங்கி இன்றுவரை ஒரு பௌர்ணமி நாளிலும் சில வினாடிகளேனும் தரிசனம் கிட்டாது இருந்ததில்லை. மேகங்கள் சூழ்ந்து, மலை பெய்துகொண்டிருக்கும் நாட்களிலும் கூட அவர்கள் எனக்கு தரிசனம் தராது இருந்ததில்லை. 


இம்முறை சிவன்மலை உச்சியில் நின்று சிவசக்தி தரிசனம் காண்கிறேன். அத்துனை மகிழ்ச்சி. ஆழ்ந்ததொரு அமைதி சொல்லாமல் வந்து தொற்றிக்கொண்டது. அகமகிழ்தேன். என் இடையிழந்தேன். அவ்வளவு தளர்வாய் உணர்ந்தேன் நான். பூரண தரிசனம் கிடைக்கப்பெற்றேன் எனலாம். சட்டென தந்தை கூறிய சென்னிமலை நியாபகம் வர அருகில் நின்றிருந்த வாடகை கார் ஓட்டுனர் ஒருவரிடம் இங்கிருந்து சென்னிமலை செல்ல வழி இருக்கிறதா, எத்தனை தூரம், நாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்ற விவரங்களைக் கூறி கேட்டேன். அவர் இங்கிருந்து செல்வது எளிதுதான் திரும்ப உங்கள் தளத்திற்கு செல்ல வேறு பாதை உள்ளது என தெளிவாய் கூற. எங்கள் பயணம் சென்னிமலை நோக்கி திரும்பியது. மாலை வெகு நேரம் ஆகிவிட்டதாலும் சிவன்மலையை விட சற்றே உயரமான செங்குத்தான மலை என்பதாலும் இம்முறை காரிலேயே மேலே சென்றேன். எத்துனை அற்புதமான தரிசனம் அது. அதிக கூட்டம் இல்லை. அழகன் முருகன் என்பதற்கு சாட்சியாய் இயல்பான அழகுடைய முருகன் சிரிப்பால் வரவேற்றார். இங்கும் அதே அனுபவம். தரிசனம் முடிந்து வெளியே வந்த பொழுது எங்களுக்கு எதிர்புறம் ஒரு சிறு கூட்டம் அபிசேக பொருட்களுடன் சென்றனர். விசாரித்தபோது, பௌர்ணமி பூஜை என அறிந்து திரும்ப உள்ளே சென்றோம். எத்தனை அலாதியான அனுபவம் அது. அங்கு அழகன் முருகனுக்கு அபிசேகம் நடக்க, ஒரு சிறு கூட்டமே அழகான தமிழில் இனிமையான ராகத்தில் ஒரு சேர கந்த ஷஷ்டி கவசமும், கந்தகுரு கவசமும் பாட, இந்த அன்பு கலந்த பூஜையில் கலந்துகொள்ள என்ன பாக்கியம் செய்திருக்க வேண்டும் என் எண்ணிக்கொண்டேன். அங்கும் அபிசேகம் முடிந்து கிளம்பி வீட்டிற்கு வர இரவாகி விட்டது. அன்று காலை முதல் நடந்த விசயங்களையும் அனுபவங்களையும் பார்க்கும் பொழுது, என்ன நினைப்பது. எல்லாம் அவன் செயல். ஒவ்வொரு தருணத்திலும் எல்லாம் வல்ல இறைவன் நாம் என்ன செய்ய வேண்டும், எங்கு இருக்க வேண்டும், எது நமக்கு கிடைக்கப் பெற வேண்டும் என நிச்சயத்து வைத்திருப்பது தெளிவாய் புரிகிறது.
வாழ்வது மட்டுமே நமது கடமை. வாழ்விப்பது அவன் செயல். எண்ணங்கள் மிக மிக முக்கியமானவை. எதை எடுப்பது எதை விடுவது என்பது அதனினும் முக்கியம். அதை எப்படி அறிவது என்றால். புலன்களை திறந்து வைக்க பழக வேண்டும். தியானத்தில் புலன்களை முடிவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் மற்ற நேரத்தில் புலன்களை திறந்திருப்பது. உள்ளும் புறமும் விழிப்புடன் இருக்கும் பொழுது நாம் ஒவ்வொன்றையும் தெளிவாய் புரிந்துகொள்ள முடியும். இது எனது அனுபவம் மட்டுமே. உங்கள் அனுபவம்கள் முற்றிலும் வேறுபட்டவைகளாக இருக்கலாம். 


எதுவாயினும் ஒன்று நிச்சயம். எல்லாம் அவன் செயல். நம் சனாதான தர்மமும், இந்து மதமும் எத்தனை எத்தனையோ ரகசியங்களை தன்னுள் புதைத்து வைத்துள்ளது. எதாவது ஒன்றிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். கடவுளை நம்புகிறீர்களோ, இல்லையோ அதை முழுமையாக செய்யுங்கள். அதைத்தான் சனாதான தர்மம் தெளிவாய் உரைக்கிறது. உங்கள் நம்பிக்கை எத்தனை உறுதியானதோ அத்தனை அனுபவங்களை அது உங்களுக்கு வாரி வழங்கும். இங்கு நாம் வெறும் கருவிகள் என்பதை தெளிவாய் உணர்த்தும். ஒவ்வொரு கணமும் வாழ வேண்டியவை. எச்செயலும், எப்பொருளும், எந்த சூழ்நிலையும் இங்கு காரணமின்றி நிகழ்வதில்லை. 

சம்போ மகாதேவா!!! 

எல்லாம் நிறைவாகட்டும். சுயம் காண விழிப்படைவோம்.

கருத்துகள் இல்லை: