ஞாயிறு, 30 நவம்பர், 2014

புத்தாண்டு!!!

இன்று இறுதி நாளை மிக மெதுவாக
எண்ணிக்கொண்டிருக்கும் கடந்துவிட்ட ஆண்டே,
என்ன மாற்றம் கொண்டு வந்தாய் நீ.
முன்பு நடந்த சம்பவங்களின் தொடர்ச்சியாய்  வந்தாய்,
முடிவிலிகளை கண்டு முடிவு சொல்லாமல் நீயும் போகிறாய்.
மீண்டும் ஒரு ஆண்டு நாளை தொடங்கும்,
என்ன மாற்றம் தரப்போகிறாய் புத்தாண்டே.
எல்லா வருடமும் வந்து செல்லும் ஒரு தொடக்க நாளாக  மட்டுமே
இருந்துவிட்டு செல்லப்போகிறாயா??
சரி நீ என்ன செய்வாய்,
நீ வருவதும் இல்லை, போவதும் இல்லை,
நொடி, நிமிடம், மணி, பகல், இரவு, நாள், வாரம், மாதம், வருடம்
என் இவையெல்லாம் மனித கணக்குகள் தானே,
இயற்க்கை அதன் போக்கில் இயங்குகையில்
மனிதன் தான் நேரப்படி இயங்க
உன்னை பெயர்த்து  பிரித்துவிட்ட பெயர்கள் தானே இவை .
வா நீயும் வந்து செல்.
எப்பொழுதும்போல உன்னையும் வாழ்த்துக்களுடன்
வரவேற்று வழி அனுப்புகிறோம்.
நீ வரப்போவதுமில்லை, எங்கும் செல்லப்போவதுமில்லை.
நிலையான காலமே, இதோ வந்து செல்லும் நிலையற்ற மனிதம்
உன்னை வரவேற்க காத்திருக்கிறது. ஏற்றுக்கொள்.
ஒரு போலிப்புன்னைகையேனும் செய்துவிட்டுப்போ.

நம்பிக்கைதான் மனித வாழ்வின் ஆதாரம்.
அதை மட்டுமேனும் விட்டுவை.
மனிதனிடம் தான் மனிதன் என்ற நம்பிக்கை மட்டுமே உயிர்த்திருக்கிறது.
என் முன்னோர் கொடுத்த நல்லவை அனைத்தும் இழந்தபிறகு
நம்பிக்கை என்ற ஒரு விஷயம் மட்டுமே உயிர்த்து
மனிதனை பிழைக்க வைக்கிறது.
அதையேனும் நீ விட்டு வைப்பாயானால்
மரித்த மனிதம் என்றேனும் உயிர் பெரும்.
சக மனிதனை தனக்கு சரி மனிதனாய் பார்க்கும்.
அதுவரை பொறுமையாய் காத்திரு காலமே.
எங்கள் கொண்டாட்டங்களில் நீயும் இணைந்து நில்.
இனியேனும் மனிதத்தை மனிதன் புரிந்துகொள்ள வழிகாட்டு.
நாங்கள் மனிதம் கடந்து வெகுதூரம் வந்துவிட்டோம்.
திரும்பி செல்ல இயலவில்லை, காரணம்
நாங்கள் பாதை மறந்திருந்தால்
எப்படியும் கண்டுபிடித்து திரும்பிவிடலாம்.
பாதையை அழித்த பாதகர்கலாகிவிட்டோமே காலமே,
எங்களுக்கு புதியதோர் பாதை கொடு.
எங்களின் நம்பிக்கையின்படி நாளை தொடங்கும்
புத்தாண்டில் எல்லாம் நிறைவாக
இறையோடு கலந்த உன்னையும் போற்றுகின்றோம்.
எங்களை கரைதேற்று. மனிதம் மறந்த மனிதாபிமானம் திருப்பி தா.
வாழ்வென்றால் என்னவென்று அறியாமல் உழன்றுகொண்டிருக்கும்
என் இனத்திற்கு வாழ கற்றுக்கொடு.
சகல ஜீவன்களையும் வாழ அனுமதிக்கும் மதிகொடு.
ஆன்மா உணர்ந்து பரமாத்மனை அடையும் சூட்சமம் கற்றுத்தா.
நாளைய தொடக்கம் நல்லனவைகளின் தொடக்கமாகட்டும்,
எங்கும் அன்பும் அமைதியும் நிறைந்து இன்பம் பொங்கட்டும்,
எல்லாம்வல்ல இறையருளால் எல்லாம் நிறைவாகட்டும்.
காலமே உன் துணையோடு வாழ்த்துகிறேன்.
நாளைய துவக்கத்திற்கு என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

அன்புடன்
காளிதாஸ்(கௌதமன் ராஜகோபால்)

கருத்துகள் இல்லை: