ஞாயிறு, 30 நவம்பர், 2014

மெய் தேடல்





காத்திருப்பில் நம்பிக்கை அற்றவன் நான்,
போகிற போக்கில் வாழ்க்கையை
அனுபவித்து தீர்த்துவிட வேண்டும்
என்பதே வாழ்வினொடு என் நிலைப்பாடு,
இதில் நீ மட்டுமே முரண்பாடாய்,
உனக்கான ஒவ்வொரு காத்திருப்பின் இறுதியிலும்
இன்னொரு காத்திருப்பிற்க்கான
கதவுகள் திறக்கப் படுகிறது.
எத்தனை முயன்றும் உன்னை
வாழ்வின் எந்த விடயத்தை போலவும்
விட்டு விலகி செல்ல முடியாமல் தவிக்கிறேன்.
என்றெனை ஆட்கொள்வாய் சகியே,
என்றென் காத்திருப்புகளுக்கு விடை கொடுப்பாய்.
வாழ்வில் வழிந்தோடும் அமிர்தம்தனை
நின் துணையின்றி ருசிப்பதேது.
இதோ மீண்டும் ஓர் இரவு கருத்தது.
அடுத்த விடியளிலேனும் நின் முகம்
காணமாட்டேனா என்ற தேடலுடன்.
எத்தனை முறை நான் பிறந்தேனோ –அதில்
எத்தனை முறைக் உனைக் காணாமல் கடந்தேனோ
அத்தனையும் புத்திக்கு அறியாமல்
சித்தனைப் போலவே தவம் கிடந்தது
பித்தனாய் அலைந்து திரிகின்றேன்
இத்தவனையேனும் எனை ஆட்கொண்டு
முக்தனாய் மாற்றித் தந்திடுவாய் என் சகியே.
ஆயிரம் பதினாயிரம் இரவுகள்
நீ இன்றி கடந்து சென்றாலும்
ஏதோ ஒரு விடியலில்
ஜோதியாய் என் எதிரே நீ அமர்ந்து
என் முன்வினை பாவமெல்லாம்
முழுவதுமாய் எரிந்து மடிந்து போக
இழுத்தென்னை அணைத்திடுவாய் என் சகியே.
மீண்டுமொரு ஜன்மம் நான் மீளா வண்ணம்
என்னை உன்னுள்ளே கலந்திடுவாய் என் சகியே.

:- கௌதமன் ராஜகோபால்

கருத்துகள் இல்லை: