கல்லூரி கால நண்பன் ஒருவனை வெகு நாட்கள் கழித்து இன்று எதேட்சையாய்
சந்தித்தேன். அவன் என் வகுப்பை சேர்ந்தவன் அல்ல, ஆனால் கல்லூரி காலத்தில் என்னை
அந்த கல்லூரியில் அறியாதவர்கள் எண்ணிக்கைக்கு உட்பட்டவர்களாகத்தான் இருந்திருக்க
வேண்டும். எல்லோரிடமும் சகஜமாய் பேசும் இயல்பொன்றே எனக்கு அத்துனை சகாக்களையும்
பறிட்சயமாக்கியது. ஒரு இயல்பான நல விசாரிப்புகள் எல்லாம் கடந்தபின், என் கல்லூரி
நண்பர்கள் யாராயினும் என்னைக் கண்டவுடன் கண்ணில் மின்னும் குறும்பு இன்றும் அவனைத்
தொற்றிக் கொண்டது. அடுத்து அவன் கேட்கவிருக்கும் கேள்வியும் புலப்பட்டது. என்ன
மச்சா இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்க. காலேஜ்ல உனக்கு மடியாத பொண்ணுங்களா, எத்தன
பேரு இருந்தாங்க. ஒருத்தர கூடவா நீ லவ் பண்ணல. உன்னையும் யாரும் லவ் பண்ணலையா...
எப்பவும் போல பதில் சொல்லாம இப்பவாச்சும் உண்மைய சொல்லுடா. இப்ப நாம காலேஜ்லயும்
இல்ல. இந்நேரம் அனேகமா உன் தோழிகள் எல்லாருக்கும் கல்யாணமும் ஆயிருக்கும். இது
எனக்கு வருத்தமளிக்கும் கேள்வி ஒன்றும் இல்லை. கல்லூரியில் தினம் தினம் நண்பர்கள்
முதல் ஆசிரியர்கள் வரை என்னை கிண்டலும் கேலியும் செய்யாதவர்கள் மிகக் குறைவு.
காரணம் எல்லோரிடமும் இயல்பாய், ஆண் பேதமின்றி போகிற போக்கில் பேசிவிட்டு சென்றுகொண்டே
இருப்பேன். சீனியர் ஜூனியர் என்ற எந்த பேதமும் கிடையாது. என்னை யாரேனும் தேடினால்
கூட என் கல்லூரி நண்பர்கள் மட்டுமல்ல, என் வகுப்பாசிரியரும், கணக்கு வாத்தியாரும்,
துறைத் தலைவர் கூட சொல்வார், அவன் எங்க இருப்பான்னு
தெரியாதா? செகண்ட் எம்சிஏல பாருங்க என்று.
ஆமாம் கல்லூரிக்குள் முதல் முறை சென்ற போது ஒரு பயம்
இருந்தது, அதுவரை ஆண்கள் பள்ளியில் படித்தவன். என் சகோதரிகள் மற்றும் அவர்களின்
தோழிகளோடு சகஜமாய் பேசிப் பழகியிருந்தும், இருபாலர் படிக்கும் கல்லூரி என்னைக்
கொஞ்சம் கலங்கடிக்கத்தான் செய்திருந்தது. சேர்ந்து மூன்றே வாரத்தில் ஒரு
நிகழ்ச்சியில் ஒரு குறிப்பிட்ட நிகழ்வை நடத்தும் பொறுப்பு இரண்டாம் ஆண்டு எம்சிஏவில்
இருந்து இரு சகோதரிகளுக்கும் தரப்பட்டு அவர்களோடு என்னையும் இணைத்து
விட்டிருந்தனர். என் தடுமாற்றம் கண்டு எனக்கு தைரியமளித்து, அவர்கள் வகுப்பிற்கு
அழைத்துச் சென்று பலரை அறிமுகம் செய்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் என்னில் எண்ணற்ற மாற்றங்களை
விதைத்தனர். அவர்களின் வாஞ்சைதான் என்னை கல்லூரியில் எவரும் அறியும் ஒருவனாய்
மாற்றிக் காட்டியது. பலநாட்கள் என் மதிய உணவு அவர்கள் வீடுகளிலிருந்து வந்ததுதான்.
இது என் இளங்கலை முதல் ஆண்டிலேயே நடந்தவை.
பின்னர் நாட்கள் செல்ல செல்ல என் நட்பு
வட்டம் மிகப் பெருகியது வேறு கதை. என் முகநூல் நண்பர்கள் பட்டியல் சத்தமில்லாமல் சொல்லும் இது எத்தனை உண்மை என்பதை.
அவன் மீண்டும் இப்படிக் கேட்டதற்கு எப்பொழுதும் போல்
இப்போதும் சிரித்து இல்ல மச்சா யாரும் இல்லை. இப்பவும் நானும் நானும் மட்டும்தான்.
நமக்கு இதுதான் செட் ஆகும். லவ் எல்லாம் வேலைக்கு ஆகாது. அவன் செல்லமாய் என்
முதுகில் தட்டி எப்பவும் ஹீரோடா நீ என்று என்னை மேலும் கேலி செய்ய. கல்லூரி கால
நண்பர்கள் அவர்களின் இப்போதைய நிலை என ஒரு மணி நேரத்திற்கும் மேல் பேசிவிட்டு,
அலைபேசி எண்களை பரிமாறிவிட்டு, முகநூல் வாட்ஸ்அப் என ஏனைய உதிரிகளிலும் இணைக்க
சொல்லிவிட்டு, ஆரத்தழுவி விடை பெற்று சென்றான். அவன் போகும் வரை அவன் செல்லும்
வழியினையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் தூரம் செல்ல செல்ல கொஞ்சம் கொஞ்சமாய்
மறையத் தொடங்கி இருந்தான். என்னில் ஏதோ பாரம் ஏறத் தொடங்கி இருந்தது. இதயம் சற்றே
கனத்தது. என்ன இது, அவன் அத்துனை நெருக்கமானவன் ஒன்றும் அல்லவே, எப்போதும்
கல்லூரியில் பேசுவதுபோல் இன்றும் பேசினேன். பின் ஏன் இந்த திடீர் மாற்றம் என்
மனதில். அவன் என்னில் இருந்து எதையும் இட்டுச் செல்லவும் இல்லையே. ஆம் அவன்
எதையும் கொண்டுவந்து விடவும் இல்லை, எடுத்துச் செல்லவும் இல்லை. ஆனால்...
உள்ளிருந்ததை, என்னில் புதைந்து மனதின் அடி ஆழத்தில்
நிறைந்திருந்ததை, எனக்கே தெரியாமல், பூ அறியாமல் தேன் எடுக்கும் வண்டு போல்,
கிளப்பி விட்டு சென்றிருக்கிறான். மெல்ல கணத்தது இதயம். அப்படி அவன் ஒன்றும்
பேசிவிடவில்லையே பின் ஏன் இந்த மாற்றம். வழக்கமான கேள்வி என்று சொன்னேனே, அது
வழக்கமானதுதான், ஆனால் அது கல்லூரி காலம் முடியும்வரை. பின் எல்லோரும் அவரவர் ஊர்
பார்த்து போனபின் அதைக் கேட்க நாதியில்லை. அதனால் அந்த கேள்வியும் என்னிலிருந்து
மறைந்திருந்தது.. மிக நீண்ட நாட்கள் கழித்து இதைக் கேட்டவுடன், பழைய நினைவுகள் என்னில்
பொங்கி எழத் தொடங்கியது போலும். இத்தனை நாட்களாய் அடி ஆழத்தில் அடக்கி
வைத்திருந்ததாலோ என்னவோ, ஆழிப் பேரலையாய் சீறத் தொடங்கி இருந்தது அவளின்... ஆம்
அவளின் நினைவுகள்தான். என்னதான் எல்லோரிடமும் சகஜமாய் பேசி திரிந்தாலும், அதில்
ஒருத்திக்கு மட்டும்... ஏனோ எனக்கே தெரியாமல் அவள் ஒருத்திக்கு மட்டும் என் இதயம்
சற்று அதிகமாவே இடமளித்திருந்தது. ஏன் சமயம் வாய்த்தால் மொத்த இதயத்தையும்
அவளுக்கே தாரைவார்க்கவும் தயாராய் இருந்தது.
சாதனா... சாதனா.. சாதனா................... என என் உள்ளம்
எங்கும் அவள் பெயர் மட்டுமே எதிரொலிக்க தொடங்கிவிட்டது. ஆழிப் பேரலை கூட ஒரு
எல்லைக்குள் நிற்கும் எனலாம். அவளின் பெயரலைகள் மனதில் தொடங்கி இந்த பிரபஞ்சம்
முழுதும் எதிரொலிப்பதாய் உணர்ந்தேன்.. சட்டென வண்டியைக் கிளப்பி வீடு வந்து
சேர்ந்தேன். மொட்டை மாடியில் கவிந்து குடையாய் விரிந்திருந்த அந்த வேப்ப மரத்தின்
நிழலில் இட்டுருந்த கட்டிலில் அமர்ந்து சுவற்றில் சாய்ந்து என்னை கொஞ்சம் ஆசுவாசப்
படுத்திக் கொள்ள நாள் முழுதும்
சுட்டெரித்து, அதன் தணல் கொஞ்சம் கொஞ்சமாய் குறைவதைப் போல் மேற்கு திசை எங்கிலும்
பொன்னிறமாக்கி விரைந்து கொண்டிருந்த அந்திச் சூரியனை வெறித்துக் கொண்டிருந்தேன்.
மெல்ல என் விழிகள் இருட்டத் தொடங்கி இருந்தது. என் உணர்வுகளிலிருந்து என் மனம்
விடுபட்டு வேகமாய் வெகு வேகமாய் என்னை பழமைகளுக்குள் இழுத்துச் சென்று
கொண்டிருந்தது.. மனம் என் கட்டுப்பாட்டில் இல்லை என்பது மட்டுமே நான்
அறிந்திருந்தேன். இருந்தும் அதைத் தடுக்கும் ஆற்றல் அற்றிருந்தேன். முற்றிலும் என்
உணர்விழந்து, பழமைகளின் நினைவுகளில் முட்டி மோதி மனம் இழுத்த இழுப்புக்கெல்லாம்
வளைந்து கொடுத்து ஓரிடத்தில் விழுந்தேன். மெல்ல சுதாரித்துக் கொண்டு எங்கிருக்கிறேன்
என அறிய முயன்றேன். அது என் அறை. இரவு நேரம். இளங்கலை கல்லூரி முடிந்தபோது நான்
எப்படி இருந்தேனோ அப்படியே இருந்தேன். கட்டிலில் படுத்துக் கொண்டு எல்லோருக்கும்
பிரியாவிடையாய் குறுஞ்செய்தி தட்டச்சு செய்து அனுப்பிக் கொண்டிருந்தேன். எல்லோருக்கும்
அனுப்பி முடித்து, என்னக்கு பதில் அளித்தவர்களின் குறுந்தகவலை படித்துக் கொண்டிருந்தேன்.
இயல்பான பதில் விடையளிப்புகள் நிறைந்திருந்தது. அதன் இடையே ஒரு குறுந்தகவல் மட்டும்,
ஹாய் மச்சா, தூங்க போறியா, கொஞ்ச நேரம் பேசலாமா என கேட்டிருக்க, குறுந்தகவல் வழி
தொடங்கியது எங்கள் பேச்சு.
சற்று முன் சொன்னேனே, வழக்கமான கேள்விதான் இருப்பினும்
இன்று அதன் தாக்கம் அதிகம் என்று. காரணம் கல்லூரி வாழிவின் இறுதி நாளில் இறுதியாய்
என்னை அந்தக் கேள்வியை கேட்டவன் அவன்தான். இறுதியாய் அந்தக் கேள்வி என்னுள் இருந்து
எல்லாவற்றையும் வெளிக்கொணர்ந்ததாலோ என்னவோ, இன்று அந்தக் கேள்வி என்னை பலமைகளுக்குள்
மீண்டும் இட்டுச் சென்றது.
பிரேம். ஒரு நல்ல நண்பன். பல இடங்களுக்கு இணைந்து சென்றிருக்கிறோம்.
அன்று அவன் முதல் முறையாய் அதைக் கேட்டான். இதுவரை உன்னிடம் நான் இதைக்
கேட்டதில்லை. கேட்டிருந்தாலும் நீ உன் பதில் என்னவென்று நான் அறிவேன். இதோ இறுதி
நாள், நாளை நான் இங்கிருக்கப் போவதில்லை. நிச்சயமாய் உன்னுள் யாரோ ஒருத்தி
இருக்கிறாள் என்பதை அறிவேன். உண்மையை சொல்லுடா என அன்பாய் கேட்க. நான் அன்று அவளை
இறுதியாய் சந்திக்க காத்திருந்து அவள் தனிமையில் நடந்து வர இயல்பாய் எதிர் செல்வதாய்
சென்று ஏதேதோ பேச நினைத்து வழக்கமான புன்னகையை மட்டும் பகிர்ந்து. பேச நினைத்த
எதையும் பேசாமல் அவள் வரும்காலம் நலமாய் அமைய வாழ்த்துக்களை பகிர்ந்து கை குலுக்கி
விடை பெற்றேன். அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு கணத்த மனத்துடன் வீடு
அடைந்திருந்த எனக்கும் இதை யாரிடமேனும் சொன்னால் சற்று பாரம் குறையும் என்றிருந்தது.
முதல் முறையாய் அவனுக்கு பதிலளித்தேன். ஆம் நண்பா. என்னுள்ளும் ஒருத்தி
இருக்கிறாள். என்னடா சொல்ற, யாரது, நம்ம காலேஜ் தானே. எந்த கிளாஸ், எந்த இயர்,
பேரென்ன, அவகிட்ட சொல்லிட்டயா இல்லையா என இயல்பான ஆச்சரியத்துடன் அடுக்கடுக்காய்
கேள்விக் கணைகளைத் தொடுத்தான். நானும் அவனிடும் பகிர்ந்துவிட முடிவு செய்தேன்.
குறுஞ்செய்தியில் என் பெருங்கனவொன்று பகிரப்பட தயாராய் இருந்தது அன்று.
சாதனா... என்னுள் வாழும் ஒரு தேவதை.. மீண்டும் வருவாள்... அவள் நினைவுகள் தொடரும்..............
:- கௌதமன் ராஜகோபால்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக