ஞாயிறு, 30 நவம்பர், 2014

தேடலின் விடை – 2



ஞானாலய வள்ளலார் கோட்டம் ஏற்பாடு செய்திருந்த தியானம் ஒரு அறிமுகம், அரங்கத்தில் வெகுசிலரே இருந்தனர். தேடல் உள்ளவர்கள் அதிலும் சிலரே. அங்கு சென்றது இமய ஜோதி திரு ஞானானந்தா சுவாமிகளின் உரையைக் கேட்க. அத்தனை அன்பு அதில் ததும்பும். அத்தனை இன்பம் அதில் பெருகும். அத்தனையும் தேடலை இன்னும் தூண்டும்.
மதியம் உணவு இடைவேளை கடந்து எங்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார், பிறகு உகார, சிகார மற்றும் ஆஞ்ஞா இயக்கங்களை தியானத்தில் உணர்வதை விளக்கினார்.
அமைதியாக இருந்து பெறுவது மட்டுமல்ல தியானம், அது ஒரு இயல்பு, அதை யாருக்கும் யாரும் கற்றுக்கொடுக்க முடியாது, கற்றுக்கொடுக்கிறேன் என்று சொல்பவன் ஏமாற்றுகிறான், ஏமாந்து விடாதீர்கள் அன்பர்களே. தன்னை தன்னிலமையில் அறிவதே தியானம். அறிந்துகொள்வோம் தியானத்தை அனுபவிப்போம்.
அமர்ந்து கொண்டு கண்களை மூடி, நாசியில் போகும் காற்றை இடகலை பிங்கலை சுழிமுனை என்று கவனிப்பது மட்டுமல்ல தியானத்தின் துவக்கம். இசையும் நடனமும் கூட தியானம்தான்.
ஆம் சிவனின் தாண்டவங்களை பற்றி நிறைய வாசித்தும், பார்த்தும் இருக்கும் நமக்கு நடனம் என்பது மனித இயல்பு என்பது கடுகளவேனும் நினைவிருப்பின் ஆடுவதற்கு நாம் தயங்க மாட்டோம்.
சுவாமிகள் தொடர்ந்தார், இனி நாம் சற்று நேரம் இயல்பாய் இருப்போம். அனைவரும் அவரவர் இடங்களில் சற்று இடைவெளி விட்டு நின்று கொள்ளுங்கள், கண்கள் மூடி இருக்கட்டும், புற உலகை மறந்தால் மட்டுமே மனிதன் அவனின் அகத்துள் பயணிக்க முடியும். இசை ஒன்று ஒலிபரப்பப்படும், அதில் வரும் இசைக்கு தகுந்தாற்போல் முதலில் சற்றே அசைந்து கொடுங்கள் அது மட்டும் போதும் மற்றவை தானாய் நடக்கும் என்றார்.
கூச்ச நாச்சங்களை வெளியே எறிந்துவிட்டு உன்னுள் ஏற்படும் அதிர்வுகளை மட்டும் கவனித்து அது உன்னை இயக்க அனுமதி.
இசை பரவத் தொடங்கியது, மெலிதாய் மிக அழகாய் மெல்லிய அதிர்வுகளுடன் துவங்கியது, மெல்ல அசைந்து கொடுத்து உள்ளுக்குள் தோன்றும் அதிர்வுகளை உன்னிப்பாய் கவனிக்க அது மெது மெதுவாய் இசையுடன் கலந்து என்னையும் அதனுள் இணைத்து அசைக்கத் தொடங்கியது. இசையோடு கலந்து கலந்து அதில் கரைந்து கரைந்து அந்த இசையாய் மாறித்தான் போனேன். 


அவனின்றி ஓரணுவும் அசையாது, ஆதி இறைவன் சிதைவடிவில் இருந்து மட்டும் அருள் பாலிப்பது இல்லை, அது நாம் ஏற்றுக்கொண்ட முறையாயினும் ஆதியாய் வந்தவன் ஆதியற்று வந்தவன் அநாதியாய் நின்றவன் அகண்டமாய் நின்றவன் இங்கங்கு எனாதபடி எங்கும் நிறைந்தவன் அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய் நின்றவன் என் அணுக்கள் எங்கும் நிறைந்திருக்கிறான் என்றால் அது மிகையாகது.
இந்த பிரபஞ்சத்தின் இயக்கம் அவனின் நடனம், ஆம் அணுக்களை இயக்க அதனுள் இயக்கமாய் இருக்கும் ஆதிமூலம் அவன், அவன் ஆட ஆட அணுக்கள் அதிர, அதிர்வுகள் தொடர பிரபஞ்சம் இயங்குவதை எவர் மறுக்க முடியும். 

அப்படி எங்கும் நிறைந்த இறை என்னுள்ளும் இருக்கிறன், அந்த இசையில் முழுமையாய் நான் கலந்த வேளை, என்னை நான் மறந்து, நான் என்ற பதம் மறந்து உடல் மறந்து அந்த இசையாய் நான் மாறிய வேளை இறைவன் என்னுள் ஆனந்தக் கூத்தாடத் தொடங்கினான்.
அவனின் ஆடலில் மெய்யும் சேர்ந்தாடியது, இசையின் வேகம் கூட கூட, அதிர்வுகள் அதிகரிக்க அதிகரிக்க அவனின் ஆட்டமும் அதிகரித்தது. பேரானந்தப் பெருவெளியில் மிதந்தேன் நான். இசை உச்சத்தை தொட்ட நேரம் புராணங்களில் கூறப்பட்டதைப் போல் நாதனின் தாண்டவங்களை ஒத்த ஒரு அதிர்வை உணர்ந்தேன். 

எல்லாம் முடிந்து இசை நிறுத்தப்பட்ட வேலையில் நாங்கள் அப்படியே இருக்கும் இடங்களில் கண்களை திறக்கமம் அமர அறிவுறுத்தப்பட்டோம். அப்படியே நாம் முன்னுணர்ந்த தியான நிலையை இப்போது தொடரச்சொன்னார், அமைதியாய் நாசியில் ஓடும் காற்றை கருத்தில் நிறுத்தி உடலில் உள்ள அதிர்வுகளை உணர சொன்னார். நிச்சயம் இது ஒரு அலாதியான முறைதான்.
எப்பொழுதும் எழிமையாய் செய்யும் தியான முறையுடன் நடனமும் கூட அது இன்னும் அலாதியான பேரின்பத்தை, நிலைத்தன்மையை நம்முள் விதைக்கிறது. உடலும் மனமும் மிக மிக தளர்வாய், அதிகமான அதிர்வுகளை உணர முடிந்தது என்னில்.
இறைவனின் இருப்பை ஒவ்வொரு அணுவிலும் உணர்ந்தேன் நான். பின் நிதானமாக சற்று நேரம் படுத்துக்கொள்ள அனைத்து அணுவும் இயல்பு நிலைக்கு திரும்ப எத்தனை இன்பம் அதில்.. 

நிச்சயம் நடனம் ஒரு தியானம்தான். அதைத்தான் நம் முன்னோர்கள் ஈசனின் தாண்டவங்களாய் நமக்கு போதித்து சென்றுள்ளனர். எல்லா மனநிலைக்கும் ஏற்றது நடனம். ஆனால் அது எல்லா இடத்திலும் சாத்தியமில்லை என்பது உண்மை.
இதை அனுபவித்து வெகு சில நாட்களில் ஓஷோவின் குண்டலினி தியான முறை பற்றி அறிந்து கொண்டது இன்னும் பயனளித்தது.
அதை அவர் நான்கு நிலைகளாய் விளக்குகிறார்.
இது ஒருமணி நேரம் செய்யக்கூடியது. நமது அறைக்குள் நல்ல இட வசதி உள்ளது போல். காரணம் நீங்கள் இசையோடு ஒன்றும் போது தடை ஏதும் இருக்க வேண்டாம்.

முதல் நிலை: முதல் பதினைந்து நிமிடம் நின்று கொண்டு உங்கள் உடல் முழுவதும் அதிர்வுகள் பரவ அனுமதியுங்கள், உடலின் எல்லா பகுதிகளையும் நன்கு குழுங்கும்படி அசைவுகள் கொடுங்கள். உதறுங்கள், குழுங்குங்கள்.

இரண்டாம் நிலை : இரண்டாம் பதினைந்து நிமிடம் அடுத்த இசையோடு சேர்ந்து ஆடுங்கள், இயல்பாய் எப்படி எல்லாம் ஆடத் தோன்றுகிறதோ, அப்படி எல்லாம், எல்லாம் இடத்திற்கும் நகர உங்களை நீங்கள் அனுமதியுங்கள், உங்களுக்கும் இசையை செலுத்தி உங்கள் அணுக்கள் அதற்க்கு ஆட அதை அப்படியே உடல்வழி வெளிப்படுத்துங்கள். 


மூன்றாம் நிலை : மூன்றாம் பதினைந்து நிமிடங்கள் அமைதியாய் அமர்ந்து உள்ளும் புறமும் உங்களுக்குள் ஏற்படும் அதிர்வுகளை அப்படியே அனுபவியுங்கள், சாட்சியாய் மட்டுமே இருங்கள், வேறேதும் செய்ய வேண்டாம்.  அதை உணர்ந்தனுவிக்கும் போது நிச்சயம் ஒரு மாற்றத்தை உணர முடியும்.
நான்காம் நிலை : இறுதி பதினைந்து நிமிடங்கள் அப்படியே தரையில் கை, கால் மற்றும் உடலை தளர்வாய் விட்டு அசைவற்று படுக்கவும். எந்த எண்ணமும் வேண்டாம். இசையில் மட்டும் நாட்டத்தை செலுத்துங்கள். உங்கள் உடலை இசையாய் மாற்றுங்கள். கலந்து கரைந்து போங்கள். இதில் கிடைக்கும் அனுபவம் என்ன என்பது உணர்ந்தனுபவிக்கும் போது தான் புரியும்..
அனைத்து நிலைகளுக்குமான இசையை நீங்களே  தேர்ந்தெடுக்கலாம் தியானத்திற்கு ஏற்றார்போல், அல்லது  அவற்றிற்கான மாதிரிகளை நீங்கள் இந்த முகவரியில் பெற்றுக்கொள்ளலாம் www.oshoosho.com  .

இறையை தன்னுள் உணர நிச்சயம் நாம் இயல்பில் இருத்தலில் மட்டுமே முடியும்.
இயல்பில் இருப்போம், இறைவனை உணர்வோம்.
எல்லாம் நிறைவாகட்டும்.
சம்போ மகாதேவா..

கருத்துகள் இல்லை: