ஞாயிறு, 30 நவம்பர், 2014

எண்ணம், செயல் மற்றும் அதன் விளைவு இதில் எது நமது?? பாகம் - 1

நமக்கெல்லாம் ஒரே எண்ணம் தான், இங்கு நடப்பவை அனைத்தும் நமது விருப்பங்கள், நான் தான் எனது வாழ்வை தீர்மானிக்கிறேன், நான் இதை செய்தேன் அதை செய்தேன் என்று கொக்கரித்து கொள்வதிலேயே வாழ்க்கை முழுமையுற்றதாய் நம்பிவிடுகிறோம். எல்லாம் கடந்து சிந்திக்கையில் எது நமது, எண்ணமா? செயலா? அல்லது அதன் விளைவா?? எது நம்மை சார்ந்துள்ளது. எதை நாம் செய்துவிட்டோம். சற்றே நம்மிலிருந்து விலகி நின்று நடப்பவற்றின் சாட்சியாக நின்று பார்க்கும் பக்குவம் எத்துனை பேருக்கு கிடைத்திருக்கும். அல்லது ஒரு விஷயம் நிகழ்ந்தேறிய பின் அது நடக்க அல்லது நடத்த நம்மால் நினைத்த நேரத்தில் இருந்து அதனுடனான தொடர்பியல் ஆயத்த செயல்களைக் குறித்து சிந்தித்து அது எவ்வாறு நடந்தது என்று சீர் தூக்கி பார்க்கும் பொறுமை எத்தனை பேருக்கு வாய்த்திருக்கும். இது இரண்டில் ஒன்று கிடைக்கப் பெறினும் பெரும் பாக்கியம் செய்தவர்களாவோம்.

ஆம் இன்றைய அவசர கதி வாழ்வில் யாருக்கும் எதற்கும் நேரம் என்பது கிடையாது. எதிலும் முழுமையாகவும் ஈடுபாடு கிடையாது. ஏதோ எல்லோரும் செய்வதை செய்துகொண்டு சென்று கொண்டிருக்கிறோம். ஊரோடு ஒத்து வாழ்வதாய் வாழ்வோடு ஒவ்வாமலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.



எனக்கு இவ்வாய்ப்புகளைபற்றிய படிப்பினைகளைக் கொடுத்த என் குருமார்களுக்குமுதல் நன்றிகளைக் கூறி இந்த பொங்கலுக்கான எனது அனுபவத்தை பகிர்கிறேன். எல்லாம் அவன் எங்கும் அவன் உள்ளும் புறமும், சொல்லும் செயலும், என் எங்கும் அவன் செய்ததே, செய்வதே. அதை மாற்ற நாம் யார்.






வழக்கமாக பொங்கல் அன்று காலை முதல் வேலையாக அப்பனின்சன்னதி சென்று தரிசித்து, பின் அதற்க்கு நேர் எதிரில் அமைந்திருக்கும் அங்காளம்மன் திருக்கோவில்(திருப்பணி நடப்பதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இரவும் பகலும் வேலை அற்ற வேளைகளிலெல்லாம் அங்குதான்)  செல்வது வழக்கம். இம்முறை சிறியதொரு மாற்றம் அப்பனை காண செல்லவில்லை. அம்மாவின் தரிசணம் முடித்து நேரே வீட்டிற்கு வந்து, உடனடியாக என் நெருங்கிய நண்பன் வீட்டிற்கு சென்றாக வேண்டிய சூழல்.

வந்தவுடன் கிளம்பியானது. இருவழிகளில் செல்ல வாய்ப்புள்ளது, ஒன்று தேசிய நெடுஞ்சாலை மற்றொன்று புறவழிச் சாலை. எது சுலபம் என்று சிந்தித்தவாறே சென்று கொண்டிருக்கையில் புறவழிச் சாலைக்கு சில மீட்டர் தூரம் முன்பு எனக்கு இடதுபுறம் சாலையின் ஓரம் நின்றிருந்த ஒரு வாகனத்தில் இடதுபுறம் திரும்பும் குறிப்பு விளக்கு எரிந்தது. எனது குரு ஒருவர் சகுண சித்தி பற்றி என்னிடம் கூறி உள்ளார். பல நேரங்களில் நம்மை சுற்றி இருக்கும் ஒவ்வொரு பொருளும் உயிரும் நமது செயல்களுக்கான சரியான முடிவினை சகுனங்களாக கூறிக்கொண்டே இருக்கும், அதை உணர்ந்துகொள்ள தனி கவனம் தேவை. எப்பொழுதும் என்ன செய்துகொண்டு இருந்தாலும் நமது சுற்றம் மீதான கவனமும் அவசியம். இது எனக்கு தரப்பட்ட படிப்பினைகளில் ஒன்று. நின்றுகொண்டிருந்த ஒரு வாகனத்தில் சட்டென குறிப்பு விளக்கு எறிந்தவுடன் முடிவானது எனது பாதை. இடது புறம் புறவழிச் சாலை வழி திரும்பியானது.

நேரே நண்பனின் வீட்டிற்கு செல்வதாய்  முடிவு. திரும்பி சில நிமிடங்கள் ஆயிருக்கும். எப்படி நான் செல்ல வேண்டிய பாதை தாண்டி அத்தனை தூரம் வந்தேன், அதும் முதல் திருப்பத்தில் திரும்ப வேண்டிய நான் அதிலிருந்து மூன்று மைல் தூரம் கடந்து மூன்றாவது திருப்பத்தை எப்படி நெருங்கினேன் இடையில் என்ன நேர்ந்தது. வேறு யாரவது உடனிருப்பின் பேசிக்கொண்டே மறந்து சென்றிருக்க வாய்ப்பிருக்கிறது, தனியே செல்லும்போது பாதை தவிர்த்து எனது கவனம் மாறியதில்லை. என்ன நேர்ந்தது இம்முறை. அவ்வழி எனக்கு புதியதும் அல்ல, பல ஆண்டுகளாக பலமுறை பயணித்த வழி அது. சட்டென சுதாரித்த போது  நான் நெருங்கிக் கொண்டிருந்தது அருள்மிகு தேனீஸ்வரர் ஆலயம் செல்லும் திருப்பம். ஊரின் துவக்கத் திருப்பம் செல்ல வேண்டியவன் அதே ஊரின் இறுதி திருப்பம் சென்றடைந்தேன். சட்டென உள்ளே உரைக்க நேரே அதிலேயே திருப்பி விட்டேன். சமயம் உச்சி வேளை 12.30 வழக்கமாக நடை சாத்தும் நேரம். ஊருக்குள் புகுந்து 2 மைல் செல்ல வேண்டும். மித வேகத்தில் இருந்து சற்றே வேகத்தை கூட்டி எப்படியேனும் அப்பனை தரிசித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் பறந்தேன். வழியை அடைத்து மேடையிட்டு பொங்கல் விழா நடத்திக் கொண்டிருந்தனர்.

வேறு வழியும் எனக்கு தெரியாது. அங்கு இருந்த பெரியவரிடம் வழி கேட்கையில் ஒரு கார் எனைக்கடந்து அருகிருந்த குறுக்கு சந்தில் சென்றது. அதன் பின்னே செல்ல சொன்னார் அந்த பெரியவர். மிக குறுகிய சாலை என்பதால் கார் ஆடி அசைந்து மெதுவாகவே சென்று கோவிலுக்கு செல்லும் பாதைக்கு சற்று முன்பாக பிரதான சாலையை அடைந்தது. அங்கிருந்து கோவிலை நெருங்கும் நேரத்தில் பிரதான ராஜகோபுர வாயிலின் ஒரு கதவு மூடப் பட்டிருந்தது. இது கோவிலின் நடை அடைப்பதற்கான அடையாளம். வெளியிலிருந்து வருபவர்கள் தூரத்திலே கண்டு கொள்ளலாம் மூலவர் சன்னதி அடைக்கப் படுகிறது என்று.

வாகனத்தை நிறுத்திவிட்டு வேகமாக ஓடினேன். உள் நுழையும் வரைதான் அவசரகதி எல்லாம், அது என்னவோ கோயிலுக்குள் சென்றுவிட்டால் மனம் சற்றும் சலனப்படுவதில்லை. நேரே சென்று விநாயகரை வழிபாட்டு, தட்சிணாமூர்த்தியைக் கண்டு, லிங்கோத்பவர் முடித்தால் அவரின் எதிரில் பஞ்ச லிங்கேஸ்வரர் அமர்ந்திருப்பார். பிரம்மாண்ட வெண்ணிற லிங்கம். எப்போது சென்றாலும் அருகிலுள்ள வில்வ மரத்தில் சில இலைகளை பறித்து ஆத்மார்த்தமாக தியானித்து அர்ச்சிப்பது பழகிப்போன விஷயம் என்பதால். அதையும் தவிர்க்க முடியவில்லை. மெல்ல சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், துர்க்கை என எல்லாம் கடந்து நந்தி தொழுதெழுந்து சன்னதி நெருங்கும் பொது பதினைந்து நிமிடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. சன்னதி நுழைகையில் வேறு யாரும் இல்லை அங்கு. அர்ச்சகர் புன்முறுவலோடு வரவேற்றார். சன்னதியில் நின்று தேனீஸ்வரரை கண்ட நிமிடம் என்னுள் ஏதோ அதீத மாற்றம். மிக மிக மென்மையாக உணர்ந்தேன். உள்ளிருந்து எதோ ஒன்று பொங்கி தொண்டைவரை வந்து நின்றது. மென்மையான விம்மல். சிவபுராணத்தின் சில வரிகளைப் பாடி, எல்லாமாகிப்போன ஈசனைப் போற்றி நிற்கையில் மூலாதாரம் தொடங்கி மேல்நோக்கிய ஒரு நெருடல். உச்சியில் சகஸ்ரகாரத்தில் ஒரு மெல்லிய உணர்வு.

தியான நேரத்தில் கிடைக்கும் ஒரு பேரின்பம். அங்கு சன்னதியில் பெற்றேன் நான். அப்பனைக் கண்குளிரக் கண்டு, அருகில் அம்மனின் சன்னதியில் வஜ்ராசனம் இட்டு சில நிமிடம் தியானித்து வெளியில் கிளம்ப அம்மன் சன்னதி அடைக்கப் பட்டது. அப்பனின் சன்னதி வழியாக வெளியே வந்து மற்ற சுற்று தெய்வங்கள் தொழுது கோவிலை விட்டு வெளியே வந்தவுடன் நடை அடைக்கப் பட்டது. இதற்க்கு எல்லாம் என்ன காரணம். எப்பொழுதும் நடை அடைக்கும் நேரம் அவசர தொனியில் இருக்கும் அர்ச்சகர் அத்துனை பொறுமை காத்தது ஏன்.? என்னை அங்கு கொண்டு நிறுத்தியது யார். நிச்சயமாய் நான் அங்கு செல்லும் எண்ணம் கொண்டிருக்கவில்லை.

ஏதோ ஒரு சக்தி எல்லாம் நிகழ்த்துகிறது. நிகழ்வுகளின் கருவியை இருக்கிறோம் நாம் என்ற எண்ணம் இன்னும் இன்னும் அழுத்தமாக மூளையின் எல்லா செல்களிலும் பதிக்கிறது அந்த சக்தி. அதை நான் அழைக்க விரும்பும் நாமம் சிவம். சர்வம் சிவமயம். அவனின்றி ஓரணுவும் அசையாது.

அனுபவங்கள் பல பாடங்களை கற்றுகொடுக்கிறது. பாடங்கள் நமது தேவைக்கும் தேடலுக்கும் தொடர்புடையதாய் அமைகிறது. தேவை என்பது நமது விருப்பம் அன்று, நமக்கு இவ்வாழ்க்கை வழங்கப் பட்டதர்க்கான நோக்கம் நிறைவேற என்ன தேவையோ அதுதான் வாய்க்கும். மற்றவை மணல் வீடுகள்தான்.

பொங்கலன்று மகர ஜோதியும் கூட கார்த்திகை முதல் தேதியில் தொடங்கிய என் விரதம் அன்று முடிவு. அப்பனும் அய்யனும் பேரருள் கொண்டு என்னை அணைப்பதை உணர்ந்தேன்.

தை இரண்டு - மாட்டு பொங்கல். பௌர்ணமி. அன்றும் எனதனுபவம் மிக அருமையானது. அடுத்த பதிவில். 

கருத்துகள் இல்லை: