ஞாயிறு, 30 நவம்பர், 2014

தேடலின் விடை - 1






தியானம் என்னும்போது பலரும் நினைப்பது கண்களை மூடி அமர்ந்து மூச்சை முறையாக்கி சிந்தனையை சீர் படுத்தி உலக தொடர்பறுத்து தன் உள்ளே பயணிப்பது என்று. நானும் அப்படித்தான் இருந்தேன். உண்மை உணரும்வரை. அதுமட்டுமல்ல தியானம் என்று உணர்த்தப்பட்டேன் என் குருமார்கள் கருணையினால். பௌர்ணமி அன்று விரதம் இருப்பது என் வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாகத்தான். இரவு சிவாலயம் சென்று அம்மையையும் அப்பனையும் கண்டு, வெளிவந்து முழுநிலவில் அம்மையையும் அப்பனையும் ஒரு சேர கண்டு வணங்கி பின் விரதம் முடிப்பேன். ஆடிப் பௌர்ணமி குரு பௌர்ணமி என்பதால் என் குருமார்கள் எல்லாவருக்கும் நன்றி கூற குரு பூஜை வைத்து விரதம் இருக்க இம்முறை நினைத்திருந்தேன். அன்று ஜூலை 22, 2013, ஆடி 6 திங்களன்று குரு பூஜைக்கான நாள். பூஜைக்காக தட்சிணாமூர்த்தி(குரு) படம் வைத்து இயற்கையால் படைக்கப்பட்டதை இறைவனாக வணங்கும் இயற்கைக்கே படைத்து பின் அதை பிரசாதமாக நாம் எடுத்துக்கொள்ளும் பல பழ வகைகள், பூக்கள் எல்லாம் வைத்து தயார் செய்திருந்தேன். விளக்கேற்றி வைத்துவிட்டு சிறிது நேரம் தியானித்தேன். தியானத்தில் இதுவரை நான் யார் யாரிடமெல்லாம் கற்றுக்கொண்டேனோ( கற்றுக்கொடுப்பவர்கள் எல்லாம் குருவாகிவிட முடியாது, நீங்கள் யாரிடம் கற்றுக் கொள்கிறீர்களோ அவரே குரு இதையும் எனக்கு போதித்தது ஓர் குரு தான்) அவர்களை எல்லாம் மனதார நினைத்து அனந்தகோடி நன்றிகளை அவர்கள் பாதங்களில் மானசீகமாக சமர்பித்தேன். இதுவரை எல்லாம் இயல்பாய் நடந்தது.
நன்றி நவில்தல் முடிந்து, மலர்களை கொண்டு அர்ச்சித்து ஆதி குருவாம் இறைவனுக்கு நன்றி கூறி மீண்டும் ஒரு ஆழமான தியானம் முடித்து, இறைவனை என்னுள் கலந்தவனை என் ஒவ்வோர் அணுவுள்ளும் இருந்து என்னை இயக்குபவனை நினைந்து என் மானசீக குருமார்கள் பாடல்களை துதித்து அவர்களின் ஓரோர் வார்த்தைகளின் இடையில் தொலைந்து மீண்டும் அடுத்த வார்த்தையில் மீண்டெழுந்து வந்தேன். ஔவயாரின் விநாயகர் அகவல் உணர்ந்து படித்தீர்களானால் அதில் உங்களை உணர்ந்து உள்ளொளி பெருக்கி முக்தியை வேண்டும் சூட்சமம் தெளியலாம். அகல்வலை உருகி உருகிப் பாடி ஓம்கார ரூபனாம் விநாயகனை மெய்ஞானம் வேண்டி வணங்கி
மகான் மாணிக்க வாசக சுவாமிகள் திருப்பெருந்துறையில் அருளிய சிவபெருமானின் அநாதி முறையான பழமை சிவபுராணத்தை துதிக்க தொடங்கினேன். கலந்து போ, கரைந்து போ, காணமல் போ இதுதான் எந்த ஒரு செயலிலும் லயித்துப் போவதற்க்கான வழிமுறை. அவரின் வரிகளில், வழங்கிய பொருளில் மெய் மறந்து ஆன்மநிலையில் சிவனை கண்டு என் சீவனால் பாடிக்கொண்டிருந்தேன். மேலே செல்ல செல்லச் என்னுள் ஏதோ ஒரு மாற்றம், நான் என் வயம் இழந்து இவ்வுலகை மறந்து, செயலே கர்மமாய் தொடர்ந்தேன். உடல் முழுவதும் ஒரு மாற்றம். அடிவயிற்றில் ஏதோ இருக்கிப்பிடிப்பதாய் ஓர் உணர்வு, நானே அறியாமல் என் கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால் அது எந்த ஒரு உபாதையினலோ அல்லது உணர்வினாலோ வந்தது இல்லை என்பதை மட்டும் உணர்ந்திருந்தேன் நான். மாணிக்கவாசகரின் வரிகளின் வழி என்னுள் நான் உணர்ந்த ஏக நாதனாம் ஏகம்பரரேஸ்வரரை தவிர வேறு ஏதும் என் சிந்தையில் இல்லை. தியானத்தில் எத்துனை அலாதி அமைதி கிடைக்குமோ அத்தனை அலாதியான பேரமைதியை எட்டி இருந்தது என் மனம். அத்தனை ஆனந்தம் அதில் ஆம் பேரானந்தம். பிறிதொரு நாளில் கேட்டுணர்ந்தேன் பிரார்த்தனை என்பது இயல்பானது, அது ஆன்மாவின் அழுகை, ஆன்மா தன் நன்றியை இயற்கையின் முன் சமர்பிக்கும் ஒரு அற்புதம் பிரார்த்தனை. ஆம் அன்று நான் உணர்ந்தது என் ஆன்மாவின் பிரார்த்தனை. நான் என்னும் பதம் கடந்து தேன் தமிழ் மொழியின் தீந்தமிழ் சொற்களில் கரைந்து எல்லாம்வல்ல இறையின் பாதம் பணிவதே லட்சியமாய், தேவைகளற்று எண்ணங்களற்று மனதும், உடலும், உணர்வும் ஒரே புள்ளியில் குவிந்து செயலைச் செய்கையில் நான் எனது ஆன்ம நிலையை உணர்ந்தேன். ஆன்மாவின் பிரார்த்தனையை உணர்ந்தேன். அந்த நிமிடங்கள், இப்படிதான் இருந்தது என்று நிச்சயத்து கூற முடியாத பேரானந்தம் என்னில் பரவுவதை உணர்ந்தேன். எந்த ஒரு செயலையும் நாம் நேர்மையாய் முழுமையாய் லயித்துச் செய்கையில் அந்த செயலின் உச்சத்தில் இறைவனை உணரலாம். இயல்பாய், சிந்தை ஒருமுகமாக நேர்மையாகச் செய்யும் எக்காரியமும் தியானத்திற்கு இணை, அது நிச்சயம் அமைதியை அளித்து பேரானந்த நிலைக்கு நம்மை இட்டுச் செல்லும் என்பதில் எனக்கு சந்தேம் இல்லை. 


குருவடி பணிதல் திருவடி சேர்க்கும்.
 


எல்லாம் நிறைவாகட்டும். சம்போ.

-          கௌதமன் ராஜகோபால்

கருத்துகள் இல்லை: