ஞாயிறு, 30 நவம்பர், 2014

ஆடிப்பூரம்...

இன்று ஆடிப்பூரம் உலகனைத்தும் காக்கும் ஏக இறையின் இடப்புறம் தனதாக்கிய உலகன்னை அவதரித்ததாக கருதப்படும் நாள். ஆடி மாதம் என்றாலே அம்மன் அருள் மணக்கும் மாதம் என்பது உலகறிந்தது. இந்த மாதத்தின் எல்லா செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் அம்மன் ஆலயங்களில் மக்கள் ஒன்றிணைந்து கூட்டு பிரார்த்தனைகளை நடத்திடுவர். பெரும்பாலான அம்மனின் ஆலயங்களில் கூழ் பிரசாதமாக வழங்கப்படும். இவை அனைத்தும் நாம் அறிந்ததே. ஆடிப்பூரம் என்பதும் மிக விசேசமாக கொண்டாடப்படும் ஒரு விழா. இன்றைய தினம் அன்னைக்கு வளையல்களால் அலங்காரம் செய்து அந்த வளையல்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். கர்ப்பிணி பெண்களுக்கு வளைக்காப்பு இடுவதுபோல், உலகனைத்தும் ஈன்ற அன்னைக்கு வளையலிட்டு மகிழும் நாள். சரி இவையனைத்தும் ஆன்மீகம். நம்பிக்கை. ஆனால் இதில் நம் முன்னோர்கள் வைத்த மெய்ஞானம் காண வேண்டாமா.

 ஆடி மாதம் என்பது தக்ஷிணாயன காலத்தின் தொடக்க காலம். இது வரை வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சூரியன் தனது தெற்கு நோக்கிய பயணத்தை தொடங்கும் மாதம். இது வரை பகல் காலம் அதிகமாக வெப்பமாக இருந்த நிலை மாறி இரவு அதிகமாகவும், வெப்பம் குறையும் காலம் ஆரம்பிப்பதால்தான் ஆடி மாதங்களில் எளிய உணவான கூழ் சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லது என்று ஜகன் மாதாவிற்கு கூழ் வார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தினர் நமது முன்னோர்கள்.

உத்தராயணக்காலம் என்பது தை மாத துவக்கத்தில் தொடங்குகிறது. மஹாசங்கராந்தியாக வழிபடுகிறோம் அதை. அப்போது தொடங்கும் சூரியனின் வடக்கு நோக்கிய பயணம் தை முதல் ஆனி மாதம்வரை கடந்து முழுமை பெரும். இந்த காலங்களில் பகல் பொழுது சற்று அதிகமாக இருக்கும். சூரியனின் வெம்மையும் அதிகமானதாக தோன்றும். ஏக இறையான மஹா தேவருக்கான அனைத்து மஹா உற்சவங்களும் இந்த சுற்றில் அமையபெற்றிருக்கும். மஹா சிவராத்திரி, குரு பௌர்ணமி உட்பட,


இந்த சுற்று முடிந்து தக்ஷிணாயன காலம் ஆடியில்  தொடங்குகிறது. இப்போது சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நகரத்தொடங்கும் பகல் குறைந்து இரவின் நீட்சி அதிகரிக்கும் காலம் இது. வெம்மை குறைந்து அன்னையின் கருணை குழுமை அதிகரிக்க தொடங்கும்.
இந்த காலகட்டத்தில் அன்னையை கொண்டாடும் நிகழ்வுகள் அதிகம் இருக்கும், ஆடி வெள்ளிகளில் அன்னையை கொண்டாட தொடங்கும் நாம் வரிசையாக அன்னைக்கான கொண்டாட்டங்களைக் காணலாம். நவராத்திரி உட்பட.

எந்த வருடமும் இவை இரண்டில் ஒன்றைத் தவிர்த்து முழுமை பெறாது. இரண்டுளும் இரண்டும் அடக்கம்,இந்த இரு கால மாற்றங்களைத்தான்,  அர்த்தநாரியாக வீற்று அனைத்தும் தன்னுள் அடக்கம் என்று உலகுணர்த்திய எகம்பரனை, உமையொரு பாகத்தானை உணர்த்தும் தத்துவமாக போதித்தனர் நம் முன்னோர்கள்.

இறையை மட்டும் போதிக்காமல் அந்த கால கட்டத்திற்க்கான உணவு முறைகளையும் பிரசாதம் என்ற பெயரில் உணர்த்திவிட்டு சென்றனர்.

இன்றைய தினம் பூமித்தாய் ஆண்டாளாக அவதரித்த தினமும் கூட. உலகைக் காக்கும் சயனனான மஹா விஷ்ணுவின் சங்கு சக்கரம் மற்ற பிற ஆயிதங்கள் மட்டும் ஆழ்வார்களாக அவதரித்த நிலையில், பூமித்தாய் ஆடி மாதம் வளர்பிறையில் பூரம் நட்சத்திரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு துளசி செடியின் அடியில் பூமித்தாய் விஷ்ணுவை சரணாகதி அடைய அவதரித்து பேயாழ்வார் கைகளில் தவழ்ந்தார்.

அவர் இறைவனுக்கு கட்டிய மாலைகளை தானே அணிந்து கண்ணாடியில் தன்னை காணும்போது, இறைவனையே தண்ணி கண்ணுள்ளார். தானும் இறையும் வேறல்ல இரண்டும் இரண்டினுள்ளும் அடக்கம். முயன்றால் இறைவனை மெய்யன்பால் அடையலாம் என்று உலகத்திற்கு உணர்த்திய "சூடிக் கொடுத்த சுடர்க்கொடியான" ஆண்டாள் இறைவனை அடைந்து வழி காட்டும்முன் வாழ்ந்தும் காட்ட அவதரித்த தினமும் இந்த ஆடிப் பூரம் தான்.

இந்த இனிய பொன்னாளில் எல்லாம் வல்ல இறைவனை துதித்து இறையருள் பெறுவோமாக.

இறையருள் பெருகட்டும். எல்லாம் நிறைவாகட்டும்.

கருத்துகள் இல்லை: