ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

அழகுக்கு ஓர் அணிகலன்



தன் தங்கை மாரூட்டி வளர்த்த தங்கச்சிலை 
வலி தாங்குமோ தாங்காதோ எனப்  பயந்து பயந்து
பட்டும் படாமலும் தலை அழுத்தி
ஆயிரம் பிஞ்சுத் தலைக்கு மேல் கண்டு
பஞ்சடைத்த கண்கள் கொண்ட நாவிதரை
பாத்து பத்திரமா காயம் படாம எடுங்க
எனப்  பல முறை பலபேர் சொல்லி
பிஞ்சுக்கால்கள் நெஞ்சுதைக்க
பஞ்சுவிரல்கள் சிகைபிடிக்க
கடைவிழியில் நீர் வழிய
சக்தியெல்லாம் சேர்த்துக்  கத்தியழும் மருமகளை
சமாதானப் படுத்த என்னவெல்லாமோ செய்து
முடிவில் முடியெடுத்து முடிக்கையிலே 
கலங்கித்தான் போயிருக்கும் சில சோடிக்  கண்ணுகளும்.
குட்டித்தங்கம் குளித்துமுடித்து புத்தாடைதானுடுத்தி
சந்தனம் பூசி சமாதானம் ஆகி வரும்வேளை
வந்த சொந்தமெல்லாம் சூழ்ந்திருக்க
மாமனும் அத்தைகளும் அவரவர் பங்கிற்கு
சீரெடுத்து வகைப்படுத்தி வரிசைவைத்து
தங்கத்தோடோடு காத்திருப்பர் 
கண்மணியே உனக்குக்  காதுகுத்த.
சிரிச்சு விளையாண்டு வேடிக்கை பார்க்க வைத்தே
முதல் காது குத்திடுவர் நீ அசந்த நேரம் பார்த்து.
ஒத்த காது தோடோட சத்தமிட்டு நீயுமழ
மாமன் மடியழுத்தி தாத்தா தலைபிடிக்க 
மான்குட்டியே உனக்கு மறுகாதும் குத்திடுவோம்.
அழகுத் தோடோடு அழுகும் உனைப்பார்த்து
வந்தசனம் உச்சுகொட்டும், பின் வாயார வாழ்த்துச் சொல்லும்.
காதாடும் கம்மலுடன் கண்ணாடி நீ பார்த்து
அழகாய் கண்சிமிட்டி அழகு காட்டையில
அந்த அழகே வெட்கப்படும் செல்லக்கிளி உனைப்பார்த்து.
ஆயிரம் பெயரோடு எமைக்காக்கும் குலசாமி
சிவ ஆராத்யா என நாங்கழைக்க அனுப்பிவைத்த தங்கரதம்
உனக்கு காதுகுத்த ஊரழைக்கும் ஆசைகொண்டு
நிகழ்வின் நிழல் கண்டு வடித்துவைத்த மடல் இதுவாம்.

கருத்துகள் இல்லை: