ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

என் குரு

 


அம்மையும் அப்பனும் ஆக்கிய உடலிது

மறலி தீண்டிடில் மண்ணது உண்ணுமே.. 

மன்னவன் தாளது கண்டிடா சீவன்தான்

மாண்டே பிறந்திடும் பின் மாண்டிடும் பிறவிக்காய்...

மறலியும் பிறவியும் சுழலதைப் போலவே

சுழற்றி எடுத்திடும் பின் கழற்றி எறிந்திடும்...

நித்தமும் வாழ்ந்திடும் வாழ்வது வேண்டிடில்

பெற்றிடு நீயதை குருபக்தியின் மூலமே...

சீவனின் குருதனை சீவனே அறிந்திடும் 

சிவனிடம் பணிவதே குருபதம் சேர்த்திடும்..

குருபதம் கிடைத்தலோ எத்தகு வரமெனில்

சிவனவன் சிந்தையில் நின்முகம் காணல்போல்...

சீவன்தான் குருதனை கண்டிட்ட மறுகணம்

மீண்டுமே ஒருமுறை ஈன்றெடுப்பார் குருவுனை...

பெற்றவர் ஈன்றது மற்றநாள் தீரினும்

குருவவர் ஈன்றது அவரையே சார்ந்திடும்...

என்னிலே உறையும் இச்சீவனை ஈன்றிட்ட

குருவவர் கனிவது இயம்புவேன் கேளுமின்...

தில்லை மாநகர் ஆடிடும் நாதனின்

எல்லையற்றதோர் கருணையின் தெளிவு...

அங்கம் ஆண்டிடும் தேவி சக்தியின்

பங்கமற்றதோர் பாசத்தின் விளைவு...

கண் காணத்துடித்திடும் கயிலாய வாசர்கள்

அம்மையப்பனின் அன்பின் செறிவு..‌.

சென்ம சென்மமாய் அலைந்து திரிந்திட்ட

ஆத்ம சக்தியது அடங்கிய உறவு...

மறலி தீண்டா மெய்வழி தெய்வத்தின்

தெய்வமாக் கருணையில் வார்த்த வளர்ப்பு...

ரமண மகரிஷியின் ஞான ஒளியாம்

நொச்சூர் அண்ணனின் பாசப்பிணைப்பு...

அண்டம் முழுதும் அடக்கவல்ல

ஆத்மவித்யையின் ஞானத்திறப்பு...

விண்ணையும் மண்ணையும் ஆண்டிடும் ஈசனின்

வண்ணமாய் பூமியில் வாழ்ந்திடும் நாதனே...

என்னையும் உன்னிலே ஐக்கியம் ஆக்கினாய்

புண்ணியம் மாதவம் செய்தனோ அறிகிலேன்...

தாம் மண்ணிலே உதித்த இப்பொன்நாள்தனில் 

பணிகிறேன் சரணமாய் நின்பத மலர்களில்...

ஆற்றியும் தேற்றியும் காத்திடும் குருவுமை

பணிவதின் பயனது சேர்த்திடும் சிவபதம்..

சிவபதம் சேர்வதே சீவனின் எல்லையாம்

ஏற்றிடும் எமையுமே சேர்த்திடும் நினதெல்லையில்

கருத்துகள் இல்லை: