ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

காதல் எனைக் கொண்ட நாள்








பதின்மம் தொட்ட நாள் முதலாய்

ஆண்டுகள் பல கடந்தேன்

நெஞ்சம் நிறைந்த காதலுடனும்

கொஞ்சும் கவிதை மாலையுடனும்...

ஒரு காதலியைத் தேடும்

அவசரமோ அவசியமோ

என்னை ஆசைக் கடலில்

அமிழ்த்தி விடாமல்

வாஞ்சையோடு வாழ்வெனைக் 

கவனித்ததின் காரணம்,

பின்னொரு நாளில் 

காலமெல்லாம் எனைக்

காதலால் மட்டுமே ஆளவிருக்கும்

அன்புள்ளமொன்றை 

என் வாழ்வின் துணையென

வாழ்வின் வழியதனில்

கண்டெத்திய நேரம்

உறவுகள் ஒன்றுகூடி 

உலகறிய உன் கரம் பிடிக்க

நிச்சயம் செய்தநாள் இது..

எத்தனை வாஞ்சை என்மீது

இக்காதலுக்கும்  இவ்வாழ்வினுக்கும்..

கவிதைக் காதலனுக்கு

கவிதையாய் ஒரு காதலியை

காதலர் தினத்தன்று

முதன்முதலாய் கரம் பிடிக்கும்

திருநாளை ஈந்தளிக்க...

இது நான் காதல் கொண்ட நாள் அல்ல.

காதல் எனைக் கொண்ட நாள்.

பிரபஞ்சம் நிறைந்த காதலால்

தினம் தினம் எனைக் கொண்டாடும்

என் அன்புக் காதலினாலான மனைவியே.

இதோ வாழ்வு எனக்களித்த பொக்கிசத்தின் கரம் பற்றி 

ஐந்தாம் ஆண்டில் அடிவைக்கிறேன்,

அனுதினம் அதிகரிக்கும் காதலுடன்..

உன் அன்பெனும் ஆளுகையில்

வாழ்வெனும் கவிதையை மூச்சிருக்கும்வரை

நேசித்து வாசிக்க வாழ்ந்திருப்பேன்..

என்றும் உனக்கான காதலுடன்.

கருத்துகள் இல்லை: