ஆணவம் கன்மம் மாயை கொண்ட
கள்வன் உள்ளிருக்கும்வரை
கயிலையம் பதியோ
கங்கா தீர்த்தமோ
காசி மஹா மயானமோ
உனை கரையேற்றுவது கடினம்...
சொல்லவொனா சோதியின்
காணவொனா காந்தி
உள்ளிருந்து பிரகாசிக்கும் தருணம்
எல்லைகளற்றவனின் எல்லையில்
நீ எங்கிருந்தாலும்
அங்கிருந்தே கரையேற்றப்படுவாய்...
ஆத்ம ஞானம் உண்டாகும்போது
உள்ளிருக்கும் ஆதிசோதி
சுயம் பிரகாசிக்கத் தொடங்கும்..
ஆத்ம ஞானம் அது ஈசனின் பாதம்.
ஈசனின் பாதம் பற்றும் ஒற்றை வழி
அஹங்காரம் விட்டொழித்து
குருபாதம் பணிதல் ஒன்றே...
குருவை எங்கே தேடுவது??
உன் பிறப்பு உறுதியானபோதே
பிறந்திருப்பார் உனக்கான குரு..
அவர் யார் என நீ அறிய
அவசியங்கள் இல்லை.
ஏதுமற்றவனை எல்லையிலா வெளியில்
தேடித் தேடித் தேடல் தெளிவு பெற்று
புறமுக பற்று அந்தர்முகமாகும் தருணம்
சரீரச் சார்பு நீங்கி
சத்தியம் தெளியும் வேளை
உன்னோடான குருவின் ஈர்ப்புவிசை வலுப்பெறும்.
ஏனெனில் உருவங்கள் வேறுபட்டாலும்
உள்ளிருக்கும் உருப்பொருள் ஒன்றென்பதால்.
உன்னுள் இருந்து உனை இயக்கும் ஒன்று
உன் முயற்சியேதுமின்றியே உனை குருபாதம் சேர்க்கும்..
குருவின் தேவையெல்லாம் ஒன்றே ஒன்றுதான்
சத்தியம் தெளிந்த சரணாகதி..
அதைப் போதித்து உனை அவர்நிலை உயர்த்தவே
ஜென்மங்களாய் உனைத் தொடர்கிறார்...
எனக்காகப் பிறப்பெடுத்து
உலகத்தின் இன்ப துன்பங்களை அனுபவித்து
எனை உயர்த்த என்னுள் உயிர்த்திருக்கும்
என் குருநாதரின் பாத கமலங்களே சரணம் சரணம்..
குருவே தாயுமானவர்
குருவே தந்தைக்கும் நேர்
குருவே சற்குரு நாதனும்
குருவே தெய்வமும் ஆகுமே...
குருவே சரணம்...