புதன், 16 மார்ச், 2022

உனக்கான காதல்


நெஞ்சகத்தே முளைத்து 
நெஞ்சுருக்கி வளர்ந்து 
கொஞ்சம் கொஞ்சமாய் 
என்னைத் தின்னும் 
எதோ ஒன்றை காதலென்று 
நான் கூறினால், காதலி யாரென்றாய்  நீ...
கனவு வளர்த்தேன்
கனவுள்ளே கானகம் ஒன்று,
கானகத்தில் பூக்கள் வளர்த்தேன்,
பூக்களுக்கு சொந்தக்காரி 
பூக்களில் மனமாய் வாசம் செய்கிறாள் என்றேன்,
சத்தமில்லாமல் சிரித்தாய் நீ...
புன்னகைப் பூவே,
என் அகம் முழுவதும் நிறைந்தவள் 
புறத்தில் யாரென்றறியேன்,
நெஞ்சுள்ளே புதைந்த காதல், 
பிரபஞ்சப் பெருவெளி முழுதும் 
நிறைந்து வழிகிறது,
அது அவளுக்கு மட்டுமானது.
அவள் என் நெஞ்சுள் மட்டுமே நிறைந்தவள்.
காதலுக்கான தேடல்  பிரபஞ்சமெங்கும், 
காதலிக்கான தேடல் கனவுகளில் மட்டும்.
விண்ணோடு பேசியதையெல்லாம்  
உன் கண்களில் முடித்தேன்,
மென்மையாய் கரம்பிடித்து 
மௌனமாய் என்னை பார்த்தாய். 
நீ திரும்பிப் போன வழியை 
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
உன்னோடு உனக்கான காதல் 
நடை பயின்று கொண்டிருக்கிறது.  

:- கௌதமன் ராஜகோபால்

கருத்துகள் இல்லை: