செவ்வாய், 19 ஜூலை, 2011

கால் சட்டை வயதில் களவுபோன இதயம்..

கால் நூற்றாண்டை கடந்துவிட்டது வாழ்க்கை,
பள்ளிப்பருவத்தில் பட்டாம்பூச்சியாய்,
கல்லூரிப்பருவத்தில் கட்டுக்கடங்கா காளையாய்
வாழ்நாள் சென்றவிதம் வினோதம்தான்..
ஒவ்வோர் நாளும் ஒரு புது அனுபவம்.
எத்தனையோ புது நட்பு வட்டங்கள்,
கால ஓட்டத்தில் கடந்து வந்த நினைவுகள் எத்தனையோ,
அத்தனையும் மனதில் பதிந்திருக்குமா என்றால்
நிச்சயம் இல்லை......
முயன்று ஒதுக்கியது கொஞ்சம்,
கால ஓட்டத்தில் காணமல் போனவை எத்தனையோ..
இவ்வளும் தாண்டி ஏதோ ஒரு பசுமை மாறா
பால்மணம் மாறா நினைவுத்துகள்கள்
ஆழ்மனதில் ஆணி அடித்த நினைவுகள்...
எனை  இன்றும் புன்னைகையில் கண்ணீர் வடிக்க வைக்கிறது.
என்னில் மட்டும் தான் இவ்வுணர்வுகளா? இல்லை,
எனை  இவ்வார்ப்பரிப்புகளுக்கு ஆளாக்கிய
நீயும் என்னை போல் துடித்துக் கொண்டிருக்கிறாயா???
உன்னை  பிரிந்த நாள்முதல் இன்றுவரை
கனாக் காரனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
அறிவுக்கெட்டா நாட்களில் நடந்தவை என்றாலும்
அம்மா சொல்லிக் கேட்ட கதைகள் மனதில்
என்றும் அழியாக் காவியங்களாய்...
நான் தவழும் வயதில் தாய் மடிமீதிருந்து சிரித்தாய்,
நான் நடைபயின்றபோது, நீ தவழ்ந்து என் கால் பற்றினாய்,
ஒருவர் மீது ஒருவர் விழ, நீ வழியால் அழுதாய்...
உன் விழி பார்த்து நான் அழுதேன்..
ஒன்றாய் அழுதோம். பின் ஒன்றாய் சிரித்தோம்..
இதுபோல் எத்தனையோ நிகழ்வுகள்,
செவிவழிச் செய்தியாய் கேட்டு வழர்ந்தவை...
பள்ளிப்பருவத்தில் இணைந்தே நடந்தோம்.
எனக்கு உடல்நிலை சரியில்லை என்றால்
ஏதோ ஓர்  காரணம் சொல்லி நீயும் இருந்துவிடுவாய் வீட்டிலேயே,
என் வீட்டிலேயே, நொடி கூடப் பிரியாமல் உடனிருப்பாய்,
அன்றே குணமாகிவிடுவேன்,  காரணம் நீயா? மருந்தா??
என்பதுதான் இன்றுவரை என் சந்தேகம்...
உனைப்பிரிந்த பிறகும் நான் உடல் நலமற்றுப் போனேன்,
ஆனால் ஒவ்வொரு முறையும் சில நாட்கள் செலவாயின..
ஆரம்பப்பள்ளிக்கும் மேல்நிலைப்பள்ளிக்கும்
இடைப்பட்ட இடைவெளியில் உண்டானது
நமக்கிடையேயான இடைவெளி...
உன் தந்தையின் இடமாற்றத்தால்  நீ இடம்பெயர்ந்தாய்..
அன்று என்னில் உண்டான வெறுமையை
இன்றுவரை எவராலும் இட்டு நிரப்ப முடியவில்லை...
இன்றும் நம் தெருவோடு சிறுகுழந்தைகள்
கைகோர்த்து நடக்கும்போதும், நாம் விளையாடிய
பூங்காக்களில் அவர்கள் விளையாடும்போதும்,
நம் நினைவுகள் ஒவ்வொன்றாய் என் விழிதிரையினில்
திரையிடப்படுகின்றன , இமைக்கதவுகளை ஈரப்படுத்தி...
இதோ ஆண்டுகள் பல உருண்டோடிய பின்
நீ மீண்டும் உனது தாயகம் திரும்பிவிட்டாய்..
என்னில் நீயும், உன்னில் நானும்
நம் பழமைகளைத் தேடினோம்...
எத்தனையோ நேற்றுகளை விழுங்கி
இருவரும் முழுவதாய் வளர்ந்திருந்தும்
நம் மனங்கள் மட்டும் நாம் பிரிந்த
அதே இடத்தில நின்றது. ஆம், அதே கண்ணீருடன்...
இத்தனை ஆண்டுகளில் நமக்குள் பேசிக்கொள்ள
எத்தனையோ நடந்திருந்தும்
நாம் அசைபோட்டதென்னவோ
நம் பசுமை மாறா நினைவுகளைத்தான்..
அன்றுபோல் கரம்கோர்க்க விரைந்து
ஏதோ ஓர் உணர்வால் உந்தப்பட்டு
ஒரு இங்கிதமான இடைவெளியில்
நம் கனவுப்பிரதேசம் ஒவ்வொன்றாய் நடைபயின்றோம்..
இன்னும் எத்தனையோ மிச்சம் நம்மில் பகிர்ந்துகொள்ள,
நாட்கள் நகரும் ஒவ்வொன்றாய்..
கால் சட்டை வயதில் களவுபோன என் இதயத்தை
வரும் காலத்தில் உன்னில் கண்டெடுக்க காத்திருக்கிறேன்...
உன் பார்வை பதிவுகளிலிருந்து நீயும் என்னில்
உன்னை தேடுகிறாய் என்ற உண்மை அறிந்து...

ஞாயிறு, 17 ஜூலை, 2011

கனவு



மழைத்துளிகள் உன்னை தாலாட்ட
குளிர் தென்றலின் வருடலில்
செல்லமே நீ கண்ணுறங்கு..
காவலிருக்கிறேன் நான்,
உன் கனவுகள் களையாதிருக்க!!

ஏக்கம்

அன்னையின் அன்பு முத்தமும்
ஆசை வருடலும் எட்டா தூரத்தில் நீ!
உன் ஏக்கத்தின் தாக்கத்தால்
இதோ வானம் தனது மேகக்கரங்களால்
வாரி அணைத்துக்கொள்ள,
வாடைக் கற்றால் வருடி
மழைத்துளிகளால் முத்தமிடுகிறது!!

சனி, 9 ஜூலை, 2011

உணர்வுகள் உனக்கானவை..

உனக்கான என் காதலை
வெறும் வார்த்தைகளில் வெளிப்படுத்திவிட முடியாது.
வார்த்தைகள் வெறும் அர்த்தம் சொல்லும்,
உணர்வுகள்தான் உண்மை உணர்த்தும்..
என்னோடு வாழத்தானே போகிறாய்
உணர்வாய் நீ, உனக்கான காதலை..

கனவொன்று கையில்..


ஏதேதோ மாற்றங்கள் என்னுள்,
உனக்காக காத்திருந்த நாட்களில்
கனவிலும் தோன்றாத சிந்தனைகள்.
காரணம் நீயா? இல்லை
எனக்காக நீ அள்ளித்தந்த காதலா?
எதோ ஒன்று... மீண்டும் நீ என்னருகே..
என் உணர்வுகள் நிஜம்...
உனக்கான என் நேசம் நிஜம்..
நட்பு எனக்களித்த பரிசு நீ..
காதல் எனக்கு நீ தந்த வரம்..
நட்பெனும்போது நீ என் தோழியானாய்.
காதலெனும்போது நீ என் தேவதையானாய்..
உணர்வோடு கலந்தவளே
என்றென்றும் நீ என் உயிரானாய்..

முதல் காதலர் தினம்!!

எத்தனையோ காதலர் தினங்களை
கடந்து வந்துவிட்டேன்,
என்னையும் காதல் தீண்டுமென்று
ஒருபோதும் நினைத்ததில்லை,
இதோ இன்று காதல் என்னை
தீண்டவில்லை,
கட்டியணைத்துக் கொண்டிருக்கிறது.
நான் காதலிக்கத் தொடங்கியவுடன்
என்னைக் கடக்கவிருக்கும்
முதல் காதலர் தினம்,
(இம்முறை நான் அதை கடக்க போவதில்லை)
என்னவள் என்னருகே இல்லை.
ஏ காதலர் தினமே எனைக்கடந்து போ,
நான் இங்கேயேதான் நிற்க்கபோகிறேன்,
என்னவள் வரும்வரை,
அவள் வரும்நாள் நீயும்
வந்தாக வேண்டும்.
அதுவரை எனைத் தனிமையில் விடு!!
என்னவள் வரும்நாள் தான்
என் காதலர் தினம்.
என்னவள் வந்தபின்
தினம் தினம் காதலர்தினம்தான்.
காத்திருக்கிறேன்,
என் செல்கள் முழுவதும்
காதல் நிரப்பி,
அண்டம் முழுவதும்
காதல் நிரப்பி ,
என்னவள் வருகைக்காய்
காத்திருக்கிறேன்..