தேவா சுப்பையா.. இப்படி ஒரு நபரை இனி வாழ்நாளில் சந்திக்க வாய்ப்பில்லை.. இந்த பதிவில் நான் வேறெதையும், இந்த
உலகத்திற்காக வேறெதையும் சொல்ல முனையவில்லை என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.
இது எனக்கும் தேவாவுக்கும் இடையில் நிகழ்ந்த நிகழும் நிகழ்வுகளின் ஒரு சிறு
வார்த்தெடுப்பாய் மட்டுமே இருந்துவிடலாம். நான் எதையும் பிரத்தியேகமாக எழுத
வேண்டும் என்று தொடங்கவில்லை. முடிக்கும் போதுதான் தெரியும் என் மனம் எதை இங்கு
வடிக்க முனைந்ததென்று.
நான் மேலே
சொன்னதுபோல் இப்படி ஒருவரை மீண்டும் வாழ்வில் காணவேண்டுமென்றால் மீண்டும் நானும்
தேவாவும் பிறந்துதான் வர வேண்டும். மீண்டும் சந்தித்துக் கொள்ள.. எங்களுக்குள்
எதுவும் இல்லை. சொல்லப் போனால் தொடர்புகள் கூட அதிகம் இல்லை. நான் அதிகம்
எழுதுபவனும் இல்லை. தேவாவின் எல்லா எழுத்தையும் வாசித்தவனும் இல்லை. இடையில்
வந்தவன். ஆங்காங்கே அவர் இட்ட பதிவுகளின் நிழலில் மழைக்காக ஒதுங்கும் ஒரு
வழிப்போக்கனாய் ஒதுங்கி இருக்கிறேன். பல நேரங்களில் அந்த எழுத்துக்கள் தந்த அனுபவத்தில்
சில்லிட்டு சில சொற்களை பின்னூட்டமாக
சிந்தியும் இருக்கிறேன்.
இவையெல்லாம்
கடந்து ஏதோ ஒன்று என்னையும் தேவாவையும் பிணைத்தே வைத்திருக்கிறது, காலமெல்லாம்
முயன்றும் கரையேற முடியாத கடல் அலைகள் மீண்டும் மீண்டும் முயற்சிப்பது போல்,
தேவாவிற்கும் எனக்கும் இடையில் ஏதோ ஒரு அலை இதயங்களை தீண்டிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு முறை அந்த அலைகள் தீண்டி பின்னிடும்
போதும் இதழ் சுவைக்கும் காதலி சட்டென பின் மாறி விழி பார்க்கும் போது மீண்டும் என்
இதழ்களை பிணைத்துக் கொள் என்று ஏக்கத்தோடு பார்க்கும் காதலனாய் மீண்டும் அந்த
அலைத் தீண்டலுக்காய் காத்திருக்கும் என் மனக் கரை.
எத்தனை உறக்கமற்ற
இரவுகளில் நீயும் நானும் கருத்துகளின் தேவைகளின்று இதயங்களை புரட்டிப்
பார்த்திருக்கிறோம். என்னிடம் உனக்கோ உன்னிடம் எனக்கோ தேவைகள் என்று எதுவும்
இருந்ததே இல்லை. இருப்பினும் தொடர்புகொள்ளாமல் இருக்க தேவைகள் ஒரு தடையாய்
இருந்ததும் இல்லை. தம்பி.. இந்த ஒரு வார்த்தை, அதுவும் உன்னிடம் இருந்து அது
வரும்போது அதன் பரிமாணம் வேறு ஒரு உலகம்.
நானும் இந்த
மூன்று ஆண்டுகளின் நினைவுகளுக்குள் முத்தெடுக்கும் ஒருவனின் தவம்போல்
முக்குழித்துப் பார்த்துவிட்டேன். எத்தனை தேடியும் நீயும் நானும் நம்மில் இத்தனை
பித்தனாய் மாறிப்போனதற்க்கான காரணம் இன்னதென்று இன்றுவரை புலப்படவில்லை.
பேசத்தொடங்கிய காலத்தில் யாரோ ஒருவனாய், பின் மெல்ல நண்பனாய், பிறிதொரு தருணத்தில்
சகோதரனாய், உலக விடயங்களை விவாதிக்கையில் ஆசானாய், பின்னொரு நாள் உலகம் தன்
முகத்திரை கிழித்து உன் முகத்தில் எரிந்து உன் கனவுகளுக்கு தீயிட்டுக் கொழுத்தி
உன் நம்பிக்கைகளை உடைத்தெறிந்து உன் கனவெரிக்கும் தீயிக்கு திண்ணக் கொடுத்த போது
என் செல்லக் குழந்தையாய் இப்படி எத்தனை அவதாரங்கள் எடுத்தாய். இதில் எது நீ, இல்லை
எது நான்.
நீயும் நானும்
கனாக்காரகள் தான், ஆனால் நம் கனவுகள் என்றும் வாழ்க்கைக்கு வெளியே இருந்ததில்லை,
வெளியே இருக்கவும் வாய்ப்பில்லை. காரணம் வாழ்வென்பது ஏதோ கடையில் விற்கும்
பொருளல்ல, நெக்கொடிய பாடுபட்டு, உயிர் முழுதும் செலவிட்டு வாங்கி வந்து
வாழ்ந்துகொள்ள. ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு இடத்திலும் சந்திக்கும் ஒவ்வொரு
நபரிடமும் ஒவ்வொரு தனிமையிலும் நமக்கான வாழ்க்கை வழிந்தோடிக் கொண்டிருக்கிறது
என்பதை உணர்ந்திருப்பதே நமக்கான பலமும் பலவீனமும். ஆம் பலவீனம்தான், காரணம் இது
எதுவுமே புரியாமல் நம்மை சுற்றி இருக்கும் நம் சுற்றத்திற்கு இதை புரிந்து கொண்டு
போகிற போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மை புரிந்து கொள்வதில் இருக்கும்
பிரச்சனைதான் நம் பலம் பலவீனமும் ஆனதின் பின்னணி. எதிலும் இரு பக்கங்கள்
இருக்கும். நாம் எப்போதும் போல் நமக்கு தேவையானதை மட்டுமே எடுத்துக் கொள்வோம். நம்
கனவுகள் வாழ முடியாதவர்களின் வெற்றுக் கனவுகள் அல்ல, நம் வாழ்வின் அத்தியாயங்கள்.
அவை என்றும் நம்மோடு இருக்கும். அவைகளோடுதான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
எத்தனை பேர் தான்
வரட்டுமே, வந்து வந்து செல்லட்டுமே, மீண்டும் யாரேனும் வருவார்கள், மீண்டும்
செல்வார்கள் இதானால் வாழ்வில் எந்தவொரு மாற்றமும் ஏற்படப் போவதில்லை. இதை
விளங்கிக் கொள்ளாமல் இருப்பதற்கு இதுவொன்றும் அணு ஆயித ரகசியமோ, வான் ஊர்தி
சூத்திரமோ அல்ல, நம் கண்முன் விரித்து வைக்கப் பட்டிருக்கும் பிரபஞ்ச சூத்திரம்.
எத்தனை உயிர்கள் வந்தன, எத்தனை நிலைத்தன, எத்தனை அதை உணர்ந்தன இருப்பினும்
எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி இந்த பிரபஞ்சம் தன்னியல்பில் இன்னும் பல தோற்றியும்
அழித்தும் தன்னை சீரமைத்துக் கொண்டேதான் இருக்கிறது. அதுபோலதான் எல்லா வாழ்வும். இதில்
தனித்ததென்றோ தனித்துவம் என்றோ ஒன்றுமில்லை. தனி மனிதனால் இங்கு எதையும் ஆக்கவும்
இயலாது அழிக்கவும் இயலாது. அதனால் அத்தனி ஒருவனும் இணைந்ததே இந்த பிரபஞ்ச சுழற்சி.
ஒரு காட்டாற்று வெள்ளத்தில் விழுந்த மரப்பட்டையாய் வாழ்க்கையில் விழுந்து அது இழுக்கும்
இழுப்புக்கெல்லாம் போராடாமல் அதன் போக்கில் போய் அருவியாய் விழுந்து, நதியாய்
தொடர்ந்து கடலில் கலந்து கரை ஒதுங்கி மக்கி மண்ணோடு உரமாகி மீண்டும் ஒரு
மரக்கிளையில் தளிராய் எழுவதென்பது எத்தனை அலாதியானது. அப்படித்தான் இந்த வாழ்வினொடு
உள்ள புரிதல் நமக்கு.
எந்த ஒரு
பொருளிலும் என் திணிப்பு இன்றி, அதை அந்த பொருளாய் பார்க்க முயல்கையிலேயே நானும்
அதனோடு கலந்து அதாகி விடுவதின் ஆனந்தம் இந்த கூட்டுக்குள், மனித மனதிற்குள்
சிக்குண்டு நின்று காணும்போது கிடைப்பதே இல்லை. இந்த பிரபஞ்சம் எல்லாவற்றையும்
ஒன்றுபோல்தான் நேசிக்கிறது. நாம் உணர்ந்ததை ஏன் மற்றவர்கள் உணர்வதற்கான
வாய்ப்புகள் கூட ஏற்ப்படுத்திக் கொள்வதில்லை என அடுத்த கேள்வி எழும்போதே, இங்கு
எல்லோருக்கும் வாழ்வு வழங்கப் பட்டிருந்தும் சிலர் மட்டுமே வாழ்வதை
தேர்ந்தெடுக்கிறார்கள் என்ற உண்மை சுளீரென்று புத்திக்குள் சாட்டை வீசுகிறது.
இப்படி ஒவ்வொருவருக்குமான பாதை நிச்சயிக்கப் பட்டிருக்கும்போது எதைப் பற்றி
கவலைப்பட்டு என்ன பயன். இதை நீயும் நானும் கல்லாமல் கற்றோம். பெறாமல் பெற்றோம்.
வாழ்வு நம்மை தேர்ந்தெடுத்திருக்கிறது. வாழ்வதற்க்கென்றே.
எழுத்து ஒரு
தவம், எழுதுபவனுக்கும், எழுத்தை நேசித்து வாழ்க்கையை யாசிப்பவனுக்கும்
இருவருக்கும் வரம்தரும் தவம். நீ இருக்கும் தவம் உன்னை விட அதிக வரங்களை அள்ளி
அள்ளி கொடுத்துக் கொண்டிருப்பது உன்னை வாசிக்கும் உன் நட்பு வட்டங்களுக்கே. நீ
வரம் தர வந்தவன் தேவா, யாசிக்க நேரமில்லை உனக்கு. நீ தரும் ஒவ்வொரு வரமும்,
வரம்பெற்றவனின் வாழ்க்கையையும் சேர்த்தே வாழ வைக்கும் உன்னை. நீ நிச்சயம்
உணர்ந்திருப்பாய் இதை. உறவுகள் உன் உடன் பிறந்தவர்கள் மட்டுமல்ல, நம்மில்
கலந்திருப்பது இந்த பிரபஞ்சம் தோன்றியது முதல் இன்றுவரை தோன்றிய அத்தனை ஜீவராசிகளின் அடையாளமும். இது அறிவியல்.
அப்படியென்றால் நீயும் நானும் வேறல்ல. உறவென்பது இந்த சமுதாய அமைப்பிற்கான ஒரு
அடையாளமிடுதலே தவிர அர்த்தங்களுக்கு அப்பால் அப்படி ஒன்றும் இல்லை.
நீ
எங்கிருந்தாலும் உன்னில் ஒரு பகுதி இங்கு இருக்கிறது, உன்னுடைய புரிதல்களால்
உலகைப் புரிந்து கொண்ட ஒருவன் இங்கிருக்கிறேன். எந்த தருணத்திலும் நீயும் நானும்
வேறல்ல. பெயர்கள் கூட அடையாள படுத்திக் கொள்ளவே அன்றி அதை ஒதுக்கி விட்டு
பார்த்தல் உயிர் உடுத்திக் கொண்ட கூடுகள் தானே நாம். நீயும் நானும் அழிவற்றவர்கள்
தேவா. இந்த தருணத்தில் இந்த வாழ்க்கையை வாழ, வாழும் தருணத்தில் நம் சுற்றத்தை நாம்
உணர்ந்த புரிதல்களின் கரைகளில் கொண்டு சேர்க்க எல்லாவற்றையும் இயக்கி விட்டு
இயங்காமல் இயங்கிக் கொண்டிருக்கும் இயற்க்கை நம்மை பணித்திருக்கிறது.
வா என் பிஞ்சு
விரல்களின்
வெப்பத்தை கொஞ்சம் உன்
விரல் கோர்த்து
சூடேற்று.
நாம் நடந்து
நடந்து
அளப்பதற்கு இந்த
பூமி தாண்டியும்
நிறைய மிச்சம்
இருக்கிறது.
காதலிக்காக
சுரந்து கொண்டே
இருக்கும்
முத்தங்களைப் போல்
நமக்காக வாழ்வும்
வழிந்து கொண்டே
இருக்கிறது,
வழிந்தோடும்
அருவியில் நீரடித்து
விளையாடும்
சிறுவர்களாய்
வழிந்தோடும்
வாழ்வடித்து
விளையாட வா.
வீட்டின் கதவுகளை
திறந்து வைத்து
பயனில்லை,
கூரைகளை பிடுங்கி எறி
வானத்தை
கூரையாக்கி
விண்மீன்கள்
என்னலாம் வா.
இங்கு
எழுத்தாளர்கள் அதிகம்,
வாழ்க்கைக்கான
எழுத்துக்களை
பிரசவிப்பதில்
மட்டும் ஏனோ
இவர்களெல்லாம்
அலியை
பெற்றெடுக்க
தயங்கும்
பெண்ணாய் பின்
நிற்கிறார்கள்.
எழுது, இந்த
பிரபஞ்சம்
மிச்சமில்லாமல்
காதல் கொள்.
நீ
மிச்சமில்லாமல் காதல் கொண்டதை
இம்மியும்
பிசகாமல் எழுத்தில்
இறக்கி வை.
எங்கள் வாழ்விற்கு வரமாக்கு.
மனதின் எல்லைகளை
விரித்துக்
கொண்டே இரு
அது வாழ்வின் பாதையினை
செப்பனிடும்
சீரமைப்பாளன்.
மனதின் எல்லை
பிரபஞ்சத்தின்
எல்லை தொடும்
வேளை
அங்கு நீயும்
இல்லை
நானும் இல்லை.
எல்லையற்றதை
ஏதுமற்றதை
அடைய நீ சொன்ன
வழிதானே இது.
எல்லாம் அடைந்த
பின்
இது வழியென்று
எதையும்
விட்டு செல்லாதே,
அவர்களுக்கான வழி
அவர்களாலே
உருவாக்கப்படட்டும்.
இங்கு ஏதோ சொல்ல
வந்தவன், ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறேன். தேவா சுப்பையா, நான் சந்தித்த எத்தனையோ
பேர்களில் ஒருவர் என்றாலும், ஏதொ ஒன்று தேவாவை ஒரு பிரம்மிப்புடனே பார்க்க
வைக்கிறது. நான் முன் சொன்னது போல், தேவாவைப் போல் இன்னொரு மனிதரை இனி நான்
பார்க்க முடியும் என்று தோன்றவில்லை. இது வரை பார்த்ததும் இல்லை. காரணம் இதுவரை
நான் தேவாவையும் பார்த்தது இல்லை. பார்த்துக் கொள்வதின் தேவையும் அற்று போனதாய்
உணர்கிறேன். காரணம் நானும் தேவாவும் வாழ்வினொடு என்றும் வேர் பிரிந்ததில்லை.
வாழ்வெனும் பெருமரத்தின் இருகிளைகளாய் இருவரும் இருக்க, எப்பொழுதும் தொடர்பில்
தானே இருக்க முடியும் தொட்டுக்கொள்ளா விட்டாலும். வாழ்வை அதன் இயல்பில் பெற்று
போகிற போக்கில் வாழ்ந்துவிட்டு போகும் நாங்கள் இருவரும் வாழ்வின் ஏதாவது ஒரு
தருணத்தில் கண்டுமுட்டிக் கொண்டால் அதுவும் வாழ்வளித்த வரமாய் ஏற்றுக்கொள்வோம்.
என்னிலிருந்து
பிரித்துப் பார்த்து விட முடியாத
என் எண்ணங்களின்
பிரதிபளிப்பாய்
உணர்வுகளின்
ஊற்றாய்
கற்பனைப்
பறவைகளின் வேடந்தாங்களாய்
என் காதல்
கலைமானின் கானகமாய்
இன்னும் என்
கவிதைகளின் பிறப்பிடமாய்
இருக்கும் என்
அன்பு அண்ணன்
தேவா
சுப்பையாவிற்கு
என் இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்களை
இந்த
கிறுக்கல்களின் மூலம் உரித்தாக்குகிறேன்..
உன்னிலும்
என்னிலும் இருக்கும் சிவம்
நம்மை ஆளட்டும். சிவோகம்
: - கௌதமன்
ராஜகோபால்
1 கருத்து:
அருமை
கருத்துரையிடுக