சனி, 4 ஜூலை, 2015

உனக்கான கவிதை!!


உனக்கான கவிதை என்பது
பொழுது போகாதவன்
போகிற போக்கில் உளறிச்
சென்ற புலம்பல்கள் அல்ல..
வாழ்வின் இறுதி நிமிடத்திலும்
மரணம் என்னை மார்போடு
அணைக்கும் வேளையிலும்
எத்தனையோ முறை நின்
இதழ் சுவைத்த எனதிதழ்கள்
உனக்கான கவிதை ஓன்றை
மரணத்தின் செவியதனில்
மகிழ்வோடு இயம்பிக் கொண்டிருக்கும்.
வாழ்வாய் உன்னை எப்படி
ஏற்றுக் கொண்டேனோ
அதில் இம்மியும் பிசகாமல்
இயல்பாய் ஏற்பேன் மரணமாயிரும்போதும்.
நீ என்பது வெறும்
கலவி செய் பிண்டமல்ல..
உடல் தளர்ந்த பின்
உதறி செல்ல..
நான் பிறந்த நாள் முதலாய்
இதோ நாடி நரம்பெல்லாம்
விழுந்து மரணத்தை அணைத்துக்
கிடக்கும் வேளைவரை நான்
வாழ்ந்த வாழ்வன்றோ நீ..
என்னில் பாதி, என்னை
முழுமையாக்க வந்த சோதி.
திகட்ட திகட்ட வாழ்வளித்தாய்.
இனி போதுமென்று நீ
வாழ்வழிக்க வரும்வேளை
வாடிய என் முகம்
வாட்டமளிக்காது உனக்கு.
எனவே மலர்ந்த முகத்தோடு
மரணமாய் வரும் உன்னை
மார்போடணைத்து உனக்கான
கவி படிப்பேன் நின் காதுகளில்.
உனக்கான கவிதை என்பது
பொழுது போகாதவன்
போகிற போக்கில் உளறிச்
சென்ற புலம்பல்கள் அல்ல.
வாழ்க்கையை அதன் அர்த்தத்தில்
வாழ்ந்த ஆன்மாவின் ராகம்.
உன்னால் மட்டுமே உன்னதம் பெற்ற
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்.


:- கௌதமன் ராஜகோபால் 

கருத்துகள் இல்லை: