புதன், 16 மார்ச், 2022

காதலோடு வாழ்வோம் -5



 
உனக்காக நான் எழுதிய ஆயிரம் கவிதைகளில் 
சொல்லாத காதலெல்லாம் உனக்கான காத்திருப்புகளின்
பேரமைதியில் விசும்பல்களாய் நிறைந்து கிடக்கிறது .
என் கவிதைகள் அத்தனை உரத்துக் கத்தியபோதும் 
கேட்காத உனக்கு என் பேரமைதியின் விசும்பல்கள்
புரிந்து விட  சாத்தியங்கள சாத்தியமாயில்லை.
இருந்தும் உனக்கான காத்திருப்புகள் நீளும், 
காதல் ஒரு நாள் உன்னையும் சூழும்,
அன்று நீ இதுவரை கண்டுணரா உணர்வுகள் 
இதயம்தனை ஆட்கொண்டு திக்குமுக்காட செய்யும் 
அன்று உனக்கான  என் கவிதைகளைப் படி 
மெல்லப் புரியும் அவை காகிதத்தில் 
சிதறிய மைத்துளிகள் மட்டுமல்ல என்று,
அவை உன் கண் மை கலைத்து
காகித மையோடு கலந்துவிடும் நேரம்
புரிந்து கொள், நீ உண்மை உணர்ந்தாய் என்று,
இதுதான் காதல், வெறும் காதல்.
ஆம் அந்தக் காகிதம் நிறைத்ததெல்லாம் 
உன் மீதான என் காதலின் 
கரை கொண்ட கிளிஞ்சல்கள் மட்டுமே.
கடல் இன்னும் அப்படியே இருக்கிறது.
உனக்கான காத்திருப்புகளின் விசும்பல்களாய்.
கடல் கொண்டும் கனியாத காதல்,
உன் இமை கொண்ட நீரின் தீரத்தில் 
தானாய்க் கனிவது காண் என் சகியே.
அன்று வா, நீ படித்த கவிதைகளில் 
உணராத காதலை எல்லாம் 
என் மௌனங்கள் சத்தமாய் உரைப்பதை 
இதயத்தின் வாயிலில் உணர்வாய். 
அதுவரை காத்திருக்கிறேன் நான்.
உன்னைப் பற்றி எந்த ஒரு கற்பனைகளுமற்று, 
நீ யார், எங்கிருக்கிறாய் என் எதைப் பற்றியும்  அறியாமலே, 
வெறும் காதலுடன் மட்டும் காத்திருக்கிறேன். 
காதல் சிறு வார்த்தைதான் ஆனால் 
அது பிரபஞ்ச இயக்கத்தின் அச்சாணி என்பதை உணர்ந்து 
என் பிரபஞ்சத்திற்க்காய் காத்திருக்கிறேன்.

காதலோடு வாழ்வோம் - 4


எண்ணற்ற கவிதைகள் எழுதி
ஒவ்வொன்றிலும் காதலை
முன்பை விட அதிகமாய்
வெளிப்படுத்தி முடித்தும்
அதிர்வுகளற்று இருக்கும்
அவளிடம் எப்படிச் சொல்வேன்
இது வெறும் கவிதைகளில்லையடி
உன்னுடனான என் கனவுகளில்
மொழிந்தெடுக்கபட்ட பகுதிகள்.
உனக்கான கவிதைகளை
வாழ்ந்து பார்க்க அழைக்கிறேன்.
நீயோ வார்த்தைகளை ரசிப்பதோடு
முடித்துக் கொள்ள விளைகிறாய்.

உனக்கான காதல்


நெஞ்சகத்தே முளைத்து 
நெஞ்சுருக்கி வளர்ந்து 
கொஞ்சம் கொஞ்சமாய் 
என்னைத் தின்னும் 
எதோ ஒன்றை காதலென்று 
நான் கூறினால், காதலி யாரென்றாய்  நீ...
கனவு வளர்த்தேன்
கனவுள்ளே கானகம் ஒன்று,
கானகத்தில் பூக்கள் வளர்த்தேன்,
பூக்களுக்கு சொந்தக்காரி 
பூக்களில் மனமாய் வாசம் செய்கிறாள் என்றேன்,
சத்தமில்லாமல் சிரித்தாய் நீ...
புன்னகைப் பூவே,
என் அகம் முழுவதும் நிறைந்தவள் 
புறத்தில் யாரென்றறியேன்,
நெஞ்சுள்ளே புதைந்த காதல், 
பிரபஞ்சப் பெருவெளி முழுதும் 
நிறைந்து வழிகிறது,
அது அவளுக்கு மட்டுமானது.
அவள் என் நெஞ்சுள் மட்டுமே நிறைந்தவள்.
காதலுக்கான தேடல்  பிரபஞ்சமெங்கும், 
காதலிக்கான தேடல் கனவுகளில் மட்டும்.
விண்ணோடு பேசியதையெல்லாம்  
உன் கண்களில் முடித்தேன்,
மென்மையாய் கரம்பிடித்து 
மௌனமாய் என்னை பார்த்தாய். 
நீ திரும்பிப் போன வழியை 
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
உன்னோடு உனக்கான காதல் 
நடை பயின்று கொண்டிருக்கிறது.  

:- கௌதமன் ராஜகோபால்