ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

ஒரு தோழியும்.. அவள் தோழனும்.. தோழர்களாய்..



 ஒரு மார்கழி மாத மாலை
உன் தந்தை பணி சுமையினால்
வாராமல் போய் என்னைப் பணித்ததால்
இருவரும் வெளியே சென்றுவிட்டு
திரும்பும் வேளை இரவு கவிந்திருந்தது,
கருமேகங்கள் சூழ்ந்து இடியும் மின்னலுடன்
மழை இப்போது கொட்டி தீர்க்கப்
போகிறேன் என்று மிரட்டி விரட்ட
அந்த புறவழி சாலையில் சற்று
அதிக வேகத்திலேயே வண்டியை ஓட்டினேன்.
மார்கழி பனியும், மழை மேகத்தால்
சில்லிட்ட தென்றலும் குளிரைக் கூட்ட
சட்டென என்னை அணைத்துக் கொண்டு
முதுகில் முகம் பதித்துக் கொண்டாய்,
சற்றே வேகம் குறைத்த போது
என் காதுகளுக்குள் கிசு கிசுத்தாய்..
குளுருதுடா நீ சீக்கிரம் போ..
நானும் எத்தனை வேகமாய் முடியுமோ
அத்தனை வேகமாய் வீடு வந்தேன்.
ஒரு வார இடைவெளியில் மீண்டும்
அதேபோல் செல்ல வேண்டி வந்தபோது
எனக்கும் உனக்குமாய் சேர்த்து இரண்டு
குளிர் தாங்கும் உடைகளை எடுத்து
உன் கரங்களில் தந்த போது
என்னைப் பார்த்து மெலிதாய் புன்னகைத்தாய்,
அதில் என்மீதான உனது புரிதலும்
நம் நட்பின் மீதான நம்பிக்கையும்
பிரதிபலிப்பது சர்வ நிச்சயமாய் தெரிந்தது.
நீ என் தோழி மட்டும்தான்..
நான் உன் உயிரான தோழன் மட்டும்தான்..
ஆனால் அன்று நம்மைக்  கடந்த,
நாம் கடந்த அத்தனை வாகனத்திலும்
வீற்றிருந்த எத்தனை கண்களுக்கு
நம்மை நாமாய் நம் மனோ நிலையில்
கண்கொள்ளக் கூடியிருக்கும் என்பது சந்தேகமே..
நீ என்னை நேரிட்டு அணைத்தாலும்
என் கண்கள் உன் கண்கள் மட்டுமே பார்க்கும்..
நம் உடல்கள் அன்பின் வெப்பம் தாண்டி
காமம் பரிமாறிக் கொள்ளாது.ஏனெனில்  
நீ என் தோழி, நான் உன் தோழன்.
நாம் கொண்டிருப்பது நட்பு..
இதை சந்தேகக் கண்ணோடு அலையும்
சமுதாயப் புண்களுக்கு பறைசாற்ற விருப்பமில்லை.
நம் நட்பை எந்த விழிகளுக்கும் முன்
விசாரணைக் கைதியாய் நிறுத்துவதில் ஆர்வமில்லை.
பூவினும் மெல்லிய இதயம் உன்னுடையது
கூர்வாள் வார்த்தைகள் அதைக் கிழித்தெறிய
ஒருநாளும் சம்மதியேன் பெண்ணே...
நீ தத்தி தத்தி நடந்த காலம் முதல்
கரம் கொடுத்து கூட நின்றவன் நான்.

காலம் உள்ளவரை என் தோழி நீ.
உன் உயிரான தோழன் நான்..  

:- கௌதமன் ராஜகோபால்.




செவ்வாய், 7 ஏப்ரல், 2015

காதலோடு


வெகு நேரமாய் முயன்று
ஒரு பக்கம் முழுவதும்

உன் பெயரை மட்டும் எழுதியதோடு
முடிந்திருந்தது என் முயற்சி...
மற்றவர்களுக்கு எப்படியோ
காதலோடு எழுதிய எனக்கும் அதை
காதலோடு வாசித்த உனக்கும்
மட்டுமே தெரியும் அதில்
வழிந்தோடிய காதலின் மோனம்..



:- கௌதமன் ராஜகோபால்