திங்கள், 26 அக்டோபர், 2009
நிசப்தமாய் ஒரு சப்தம்!!
நீ எனக்காக மட்டுமே அனுதினம்
காத்திருக்கிறாய் என்றறிந்தும்
உனைக் கடக்கும் போதெல்லாம்
ஒரு பார்வை கூடப் பாராமல்
கடந்து சென்று கொண்டிருக்கும்
எனைப் பற்றி உன் நண்பர்கள்
திமிர்பிடித்தவள் என்று கூறும் போதெல்லாம்
அவர்களைக் கடிந்து கொண்டு
அவள் என் தேவதை என்பாயே!
ஐயோ, அப்பொழுதெல்லாம்
ஓடி வந்து அப்படியே உனை
அணைத்துக் கொள்ள துடிக்கும் என் இதயம்...
என்ன செய்வேன் நான்,
எனக்காகக் காத்திருக்கும்
உனை ஏறிட்டுப் பார்க்கவே
என் பெண்மையோடு யுத்தம்
நடத்த வேண்டியிருக்கும்போது
உனை அணைப்பதேது????
நான் உனைப் பாராமல்
போவது மட்டுமே அறிந்திருப்பாய் நீ...
நீ வழக்கமாக நிற்கும்
இடத்தில் உனைக் காணா நாட்களில்
என் மனம் படும் ரணம்தனை
என் கண் வழி கண்டதில்லை நீ...
உன் காதல் கடற்கரை மீது
அலை கொண்ட காதலென்றால்,
என் காதலோ சூரியன் மீது
தாமரை கொண்டது போல் சலனமற்றது...
காதலில் காத்திருப்பது சுகம்தான்,
காக்கவைப்பது மிகக் கொடுமை...
தயவு செய்து காதலை சொல்லிவிடேன்..,
என் மனதுக்கும் பெண்மைக்குமான
போராட்டம் சற்றே ஓயட்டும்..
நின் சப்தம் கொண்டு
என் நிசப்தம் களைவாயா காதலா!!!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)